நவீன யுகத்தின் முன்னோடி திருக்குறள் அறத்தின் வழி நின்று நீதி நிலைநாட்ட வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

2 months ago 8

நாகர்கோவில்: ‘திருவள்ளுவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியது போல் அறத்தின் வழி நின்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராம் கூறினார். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் 5வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் வரவேற்றார். புதிய நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராம் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, அனிதா சுமந்த், ஜெகதீஷ் சந்திரா, விக்டோரியா கவுரி, வடமலை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் அழகுமீனா, எஸ்.பி. ஸ்டாலின், மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராம் பேசியதாவது: நீதித்துறை மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பி.சி.ஆர். சட்டம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு உரிமை மற்றும் நீதி வழங்கும் ஒளியாக உள்ளது.

இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டு இருப்பதன் மூலம் சமூக நீதியை மேம்படுத்துவதில் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்பதை உணர்த்துகிறது. சமத்துவ சமுதாயத்தின் மைல் கல்லாக இந்த நீதிமன்றம் அமைகிறது. நீதிமன்றங்கள் என்பது சாதாரண கட்டிடம் அல்ல. அனைவருக்கும் சம தர்மம், சம நீதி, மனித நலம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. நமது உரிமைகளை மீட்டெடுக்க நீதிமன்றங்கள் உள்ளன என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும். சமூக நீதி ஊக்குவிக்கப்பட வேண்டும். அனைவரும் சமம் என்பது நீதித்துறையின் கோட்பாடு ஆகும். இன்றைய நவீன யுகத்தின் முன்னோடியாக திருக்குறள் விளங்குகிறது. திருக்குறளின் 111 வது குறள் அறத்தை வலியுறுத்துகிறது. தகுதி எனவொன்று நன்றே பகுதியால், பாற்பட்டு ஒழுகப் பெறின் என்பது இந்த குறள் ஆகும். அறத்தின் வழி நின்று பகை, நட்பு, அயலார் ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே அவசியம் என திருவள்ளுவர் வலியுறுத்தி உள்ளார். நீதி வழங்குவதில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர் வழிகாட்டி விட்டார். ஒவ்வொரு பிரிவு மனிதருக்கும் சம வாய்ப்பு கிடைத்தால் அதுவே சிறந்த அறமாகும். அந்த அறம் போற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

The post நவீன யுகத்தின் முன்னோடி திருக்குறள் அறத்தின் வழி நின்று நீதி நிலைநாட்ட வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article