நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்; எதிர்கட்சிகளின் முற்றுகையால் விழிபிதுங்கியது பாஜக அரசு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

4 weeks ago 5


* அதானி, மணிப்பூர், அமித் ஷா விவகாரங்களால் திணறல்

டெல்லி: அதானி, மணிப்பூர், அமித் ஷா விவகாரங்களால் ஒன்றிய பாஜக கூட்டணி அரசை எதிர்கட்சிகள் முடக்கிய நிலையில், நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் வலுவான போராட்டத்தால் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு திணறியது. மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் ெதரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் அமித் ஷாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. முன்னதாக நேற்று நாடாளுமன்ற வாயிலில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜகவின் இரண்டு எம்பிக்கள் காயமடைந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால்தான் அவர்கள் கீழே விழுந்ததாக தெரிவித்ததை அடுத்து, ராகுலுக்கு எதிராக காவல் நிலையத்தில் பாஜக புகார் அளித்தது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டதாகவும், ராகுல் காந்தியை வழிமறித்து மிரட்டல் விடுத்ததாகவும் காங்கிரஸ் தரப்பில் மக்களவை தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மேற்கண்ட விவகாரத்தில் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் ‘அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும், ‘பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள், அமித் ஷாவை கண்டித்து விஜய் சவுக்கில் இருந்து நாடாளுமன்றம் வரை பேரணியாக சென்றனர். அப்போது எதிர் திசையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது காரில் நாடாளுமன்றம் வந்தார். அவரது காரை வழிமறித்து எதிர்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மக்களவை கூடியதும், எதிர்கட்சி எம்பிக்கள் அமித் ஷாவுக்கு எதிராக தொடர் கோஷங்களை எழுப்பியதால் மக்களவை தேதி குறிப்பிடமால் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மாநிலங்களவையிலும் இதே பிரச்னை எழுப்பப்பட்டதால் அவை நடவடிக்கைகள் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த நவ. 25ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளுடன் அமித் ஷாவுக்கு எதிரான போராட்டங்களுடன் இன்று நிறைவு பெற்றது. எதிர்கட்சிகளின் வலுவான போராட்டத்தால் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு பெரும் நெருக்கடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

The post நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்; எதிர்கட்சிகளின் முற்றுகையால் விழிபிதுங்கியது பாஜக அரசு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article