காஞ்சிபுரம்: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள், பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 29ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகின்றனர் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண், துணை தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகின்ற 29ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 29ம்தேதி காலை 10.30 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.எனவே, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தை சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணைய குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வரும் 29ம்தேதி காஞ்சிக்கு சிறுபான்மையினர் ஆணையக்குழு வருகை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.