நரிக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

3 hours ago 2

திருச்சுழி: நரிக்குடி பகுதியில் தெருநாய்கள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். நரிக்குடியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம் போன்ற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நரிக்குடி சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இவைகள் குப்பைகள் தேங்கும் இடங்கள், குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

நரிக்குடியிலிருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் நாய்களை கண்டு பதறி ஓட வேண்டிய நிலை உள்ளது. மேலும் மானூர், உலக்குடி உள்ளிட்ட கிராமங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பாக மானூர் கிராமத்திற்குள் புகுந்த வெறிநாய், எட்டுக்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. படுகாயம் அடைந்தவர்கள் நரிக்குடி மற்றும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. வாகனங்களில் செல்லும்போது நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ஆகையால் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுபட்டுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நரிக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article