நம்மோடு கூட வரும் பெட்டி!

1 day ago 2

பிறப்பும் இறப்பும் உயிர்களுக்கே உரியவை. உயிர்கள் தங்கள் வினைகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு உடலை ஏற்றுக்கொண்டு, வினைப் பயனை அனுபவிப்பதற்காக, இந்தப் பூமியில் பிறக்கின்றன. வினைகளை அனுபவிக்கின்றன. நிறைவாக இறக்கின்றன. இந்தப் பிறப்பும் இறப்பும் ஒரு சுழலாக அமைந்திருக்கிறது. முடி வற்ற இந்தச் சுழற்சியிலிருந்து மீள்வதற்காகத் தான் பிறவிகளில் உயர்ந்த பிறவியான மனிதப் பிறவியும், அந்த மனிதப் பிறவியை ஒழுங்காக வாழ்வதற்கான சாத்திரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிறவி முடிந்த நிலைக்கு மரணம் என்று பெயர். மரணம் என்பது ஒரு பிறவியின் முடிந்த முடிவல்ல. அது அந்த பிறவியின் ஒரு நிலை என்றுதான் நம்முடைய பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.அப்படியானால் இந்தப் பிறப்பும் இறப்பும் ஒரு நீண்ட பயணம் என்று சொல்லலாம். இந்தப் பயணத்தில் ஏதாவது ஒரு ஊரில் சில காலம் இருக்கிறோம். இங்கு ஊர் என்பது உடலைக் குறிக்கும். கீதையில் க்ஷேத்ரம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.

அதற்குப் பிறகு அந்த ஊரை விட்டு வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறோம். ஒரு உடலில் சில காலம் வாழுகின்ற உயிர் (ஆன்மா) ஒரு கட்டத்தில் அந்த உடலை விட்டுவிட்டு வேறு ஒரு உடலுக்கு மாறிவிடுகிறது. இந்த உடலை விடுவதை மரணம் என்றும், அடுத்தொரு உடலைப் பெறுவதை ஜனனம் என்றும் அழைக்கின்றனர். அப்படியானால் இந்த வாழ்க்கையானது ஒரு “யாத்திரை” என்று வழங்கப்படுகிறது. ஒரு இடத்திற்கு யாத்திரை போகிறோம் என்று சொன்னால் நம்முடைய உடைமைகளை எடுத்துச் செல்வதற்கு ஏதேனும் ஒரு பெட்டி நமக்கு வேண்டும் அல்லவா. அப்படிப்பட்ட ஒரு பெட்டி எல்லோருக்கும் ரகசியமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவன் இறக்கின்ற பொழுது அவனுடைய உடல் இங்கேயே விடப்படுகிறது. ஆன்மா புறப் படுகிறது. அப்படி புறப்படும்போது அந்த ஆன்மாவோடுகூட வருவது எது?இந்த கேள்வியை பட்டினத்தாரிடம் கேட்டபொழுது அவர் தமது பதிலை ஒரு பாடலாகச் சொல்லி இருக்கிறார். அற்புதமான பாடல்;

`அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே’’
இதைத்தான் கவியரசு கண்ணதாசன், மிக எளிமையாக, ஒரு திரைப்படப் பாடலில் “வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ?’’ என்று எழுதினார். இதில் கடைசி வரியை அவர் மாற்றி விட்டார். இது பற்றி அவர் விளக்கம் தருகின்ற பொழுது வினைகளைப் பற்றி பட்டினத்தார் சொல்லலாம், என்னைப் போன்றவர்கள் அதைச் சொல்ல முடியாது என்பதற்காக அதை விட்டுவிட்டேன் என்று சொன்னாராம். இது இப்படியே இருக்கட்டும். ஒருவனுடைய துவக்கம் ஜனனம் என்றால் அதற்கான ஒரு நிறைவு நிலை மரணமாகத்தானே இருக்கமுடியும்? ஜனனத்தின்போது ஏதோ ஒரு சில விஷயங்களைக் கொண்டு வருகிறோம். மரணத்தின்போது ஏதோ சில விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டும். நாம் கொண்டு செல்ல முடியா விட்டாலும் நம்மை அறியாமலேயே சில விஷயங்கள் கூட வரும்.மரணத்திற்குப் பின் நம்மோடு எது கூட வரும்? என்பதே கேள்வி.

“பற்றித் தொடரும் பாவ புண்ணிய வினைகளே” என்றார்கள் ஞானிகள் ஒரு கதை சொன்னால் புரியும்…ஒரு மனிதன் திடீரென இறந்து போனான். எமன் அவனை அழைத்து “நீ எமலோகம் வந்துவிட்டாய். இதோ இருக்கிறது உன் பெட்டி’’ என்றார். அந்தப் பெட்டியில் அவனுடைய உடைமைகள் இருப்பதாக எமன் சொன்னார். தான் பூமியில் உயிரோடு இருந்தபோது பயன் படுத்திய உடைகளும், சேர்த்து வைத்த செல்வத்தின் ஒரு பகுதியும் அல்லது தான் விரும்பிய ஏதாவது ஒரு பொருளும் இருக்கும் என்று அவன் நினைத்தான். “பரவாயில்லையே எமனுக்கும் இரக்கம் இருக்கிறதே, இறந்துவிட்டாலும் ஆசையாகச் சேர்த்து வைத்த பொருளைத்தந்துவிட வேண்டும் என்று நினைத்து இருக்கிறானே” என்று அந்தப் பெட்டியை ஆசையோடு வாங்கித் திறந்தான். ஆனால், அதில் எதுவுமே இல்லை. அவனுக்கு வெறுத்துவிட்டது. அழ ஆரம்பித்துவிட்டான். கண்ணில் நீர் வழிய “என்னுடையது என்று எதுவும் இல்லையா?’’ என்று கேட்டான்.“மகனே, பூலோகத்தில் நீ அழகான உடைகளைச் சேர்த்து வைத்தாய். அற்புதமான உணவுகளைச் சாப்பிட்டாய். நிறைய செல்வத்தைச் சேர்த்து வைத்தாய். ஆனால் அவற்றை எல்லாம் எப்படி கொண்டு செல்லமுடியும் என்பதை யோசிக்க மறந்துவிட்டாய். உன்னால் மரணத்தின் போது கொண்டு செல்ல முடியாத பொருள்களைத்தான் நீ சேமித்தாயே தவிர, கொண்டு செல்லக் கூடிய எதையும் நீ சேர்த்து வைக்கவில்லை. நல்ல பெயரோ, புகழோ, புண்ணியமோ எதுவுமே சேர்த்து வைக்கவில்லை. அதனால்தான் இந்தப் பெட்டி வெறுமையாக இருக்கிறது” இப்போது அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஐயா, பெட்டியில் என்னுடைய உடைமைகள் இருப்பதாகச் சொன்னீர்களே, இப்பொழுது வெறும் பெட்டி என்கிறீர்களே’’ எமன் சிரித்துக்கொண்டே சொன்னான்;

“மகனே.. இது ஒவ்வொருவருக்குமான பெட்டி. இந்தப் பெட்டியில்தான் உன்னுடைய பெயர், புகழ், புண்ணியம் எல்லாவற்றையும் சேர்த்து வைக்க வேண்டும். அப்படிப்பட்ட உடைமைகளுக்கான பெட்டி. உனக்கான பெட்டி. இதை உன்னோடு கொண்டு வர வேண்டியதுதான் எங்கள் வேலையே தவிர, அந்தப் பெட்டியைத் திறந்து பார்ப்பது எங்கள் வேலை அல்ல. இது உன்னுடைய உடமைப் பெட்டி என்று சொன்னேனே தவிர, உன்னுடைய உடைமைகள் இருந்ததா இல்லையா என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை நீ நல்லது செய்திருந்து அந்தப் பெட்டியில் இல்லாமல் இருந்தால் வேண்டுமானால் விசாரிக்கலாம். இப்பொழுது இது வெறுமையாக இருக்கிறதே என்று கேட்கிறாய். அப்படியானால் உன்னுடைய மரணத்தின் பின்னான எந்த உடைமையையும் நீ சேர்த்து வைக்க வில்லை என்றுதான் பொருள். இப்பொழுது நம்மிடமும் நம்முடைய மரணத்தின் பின் கொண்டு செல்லவேண்டிய பெட்டி இருக்கிறது. அதில் என்ன இருக்க வேண்டும், என்ன சேர்த்து வைக்க வேண்டும் என்பதை இனியாவது நாம் தீர்மானிக்க வேண்டும். நற்பெயர், பக்தி, ஒழுக்கம், தானம், புகழ் என்று நம் பெட்டியில் நிறையச் சேர்த்து வைப்போம்.

 

The post நம்மோடு கூட வரும் பெட்டி! appeared first on Dinakaran.

Read Entire Article