நம்ம ஊரு சாமிகள்

1 day ago 3

அரிய நாச்சியம்மன்

நெல்லை மாவட்டத்து விளாத்திகுளம் வட்டத்தில் இந்த அம்மன் கோயில்கள் உள்ளன. அம்மன் பெயரால் அரியநாயகிபுரம் என்றே ஒரு ஊர் உள்ளது. கல்லூரணி, தத்தனேரி ஆகிய ஊர்களில் இந்த அம்மனுக்குக் கோயில் உண்டு. ஆனி மாதம் செல்வாய்க் கிழமை இதற்கு பொங்கல் நடக்கும். தத்தனேரியில் அம்மனுக்குக் கற்சிலை உண்டு. இங்கு வைரவன் துணைச்சாமி. இதற்குக் கழுபோடுவர். அதனைப் பூசாரிக்குக் கொடுப்பர். துள்ளுமறியைப் பூசாரி, ஏகாளி, மேளக்காரர் பங்கிடுவர். புலவரே பூசாரி. அக்கினிச்சட்டி நேர்த்திக்கடனாக எடுக்கப்படுகிறது என்பார், துளசி ராமசாமி.

அம்பளாயி

நாமக்கல் மாவட்டம் குமரமங்கலத்தில் பறையர் இனத்தவள் அம்பளாயி. அவளுடன் பிறந்தவர்கள் பெரியண்ணன் சின்னண்ணன் என இரண்டு அண்ணன்மார்களும் நல்லக்கா என்ற தங்கையும். இவர்கள் அனாதைகளாக வளர்ந்து வருகையில் போக்கம்பளத்து மிட்டாதாரர் ஆதரவு தந்தார். அவர்கள் அவரது வீட்டு வேலைகளைச் செய்து வந்தனர். அம்பளாயி நல்லக்காவை விட அழகானவள், பொறுமைகொண்டவள். நல்லக்கா பொல்லாதவள். அக்காவிற்கு பல்வேறு தொல்லைகளைத் தர அம்பளாயி அவற்றைப் பொறுத்துக்கொண்டு அண்ணன்மார்களுக்கும் தெரியாமல் மறைத்துவந்தாள்.

அம்பளாயி சித்தூர் ஆதிசிவன் என்ற அழகும் ஆற்றலும் இல்லாத ஒருவனை மணந்துகொண்டாள். ஆதிசிவனின் பங்காளிகளுக்குப் பொறாமை. ஆதிசிவனைக் கொன்று அவளை அடைய விரும்பினர். வேட்டைக்குப் போன இடத்தில் அவனைக் கொன்றனர். அம்பளாயியும் உடன்கட்டை ஏறினாள். அவளை அண்ணன்மார்கள் தெய்வமாகப் பூஜித்தனர். அவள் தெய்வமாகி அவர்களுக்கு உதவினாள்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி வட்டம் சமுத்திரம் கிராமத்தில் கோட்டிக்கு ஐந்து மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர். அவர்களில் ஒருத்திதான் அம்பளாயி. இவளும் கணவனது பங்காளிகளால் கணவனை இழந்து தீப்பாய்ந்து தெய்வமானதாக இன்னொரு கதையும் உண்டு. இப்போதும் இக்கதை மதியம்பட்டி கிராமத்தில் வழங்கி
வருகிறது.

அய்யாசாமி

கொங்கு வட்டாரத்தில் தொழப் படும் தெய்வம் அய்யாசாமி. இக்கோயிலில் சாமியழைக்கும்போது பாடுவார்கள். பெண்கள் கும்மி கொட்டியும் ஆடுவார்கள்.அய்யாசாமி சித்தாறு என்ற ஆற்றங்கரையில் சிவபூஜை செய்தார். பிறந்தது பேரூரு. வளர்ந்தது மாதம்பட்டி, குடியிருப்பு குன்னம்பாறை, குடிகொண்டதோ வெள்ளிமலை, தென் கன்னடத்துக்காரர். பொதுவான சிக்கல்களையும் தனிமனித சிக்கல்களையும் அய்யாசாமி தீர்த்து வைக்கிறார். கானலில் விளக்கெரியும் கல்கோழி கூவும் என்றாராம். மின்சாரம் வந்தது, தொழிற்சாலையில் சங்கு ஒலித்தது. ‘கோவை நகரப்பகுதியை உழுது கொள் விதைப்பார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அது கோவையின் அழிவைக் குறிக்கும் என்பார் செங்கோ வரதராசன்.

அய்யாத்தாள்

முசிறி சேலம் சாலையில் இக்கோயில் உள்ளது. அம்மன் சிலைக்கு அருகில் ஏழு கன்னிமார் தெய்வங்களும் உள்ளனர். கோயிலின் முன்னால் குதிரை வாகனம் உண்டு. முன் மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் கருப்பண்ணசாமி மற்றும் மதுரைவீரன் சிலைகள் உள்ளன. முத்துராஜா இனத்தவருக்கான குடிபாட்டுத் தெய்வம்.ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நிகழ்வுறும். அம்மனுக்குச் சுத்த பூசை நடைபெறும். பூசாரி வாயைக் கட்டிக் கொண்டு தான் பூசை செய்வார். பச்சைப்போடுதல் என்ற நிகழ்ச்சியும் சிறப்பாக நடக்கும். விழாவின் மறுநாள் சிலர் அலகு குத்திக்கொண்டு தீ மிதிப்பர். சிலர் தீச்சட்டியுடன் தீ மிதிப்பர் என்பார் து. தியாகராஜ்.

அரவாண்டியம்மன்

தஞ்சை மாவட்டத்து மங்கலத்தில் அம்மன் வடக்குநோக்கி அமர்ந்துள்ளாள். கோவிலுக்கருகில் பாம்புப்புற்று உள்ளது. அம்மனுக்கு அபிடேகம் நடக்கும் போதெல்லாம் புற்றுக்கும் நடைபெறும். புற்றுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தண்ணீர் தெளித்துகோலமிட்டு முட்டை, பால் வைத்து வழிபடுவர்.

ஆண்டுதோறும் 5 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பொங்கல் பூசை, அரவாண் களப்பலி, அர்ச்சுனன் தபசு, பால்குடம், தீமிதி முதலியவை நடைபெறும். அம்மன் மங்களம், புதூர், கிருட்டிணாபுரம், மாவலிப்பட்டி, பாலக்காடு, புதுப்பட்டி, கஸ்தூரிப்பட்டி ஆகிய ஊர்களுக்கும் ஊர்வலமாகச் சென்று தன் எல்லை வந்து சேரும். அப்போது மருளாளி ஆட்டுக் கிடாவைப் பலியிட்டு அதன் இரத்தத்தைக் குடிப்பார். மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுறும் என்பார் து.தியாகராஜ். குழந்தைப் பேறு இல்லாதவர்கள்அம்மனை வேண்டிக் கொண்டு தொட்டிலைத் தொங்கவிடுவார்கள்.

அரியக்கா பெரியக்கா

தர்மபுரி மாவட்டத்தில் இத்தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். இதனை ‘அண்ணன் தம்பிசாமி’ என்றும் அழைப்பர். கிருட்டிணகிரி பாப்பாரப் பட்டியில் இவ்வழிபாடு நடக்கிறது. எட்டுப்பட்டி ஓடமங்களம், குடிமேனஹள்ளி, அகரம், ஆவத்தவாடி, மருதேரி போன்ற பகுதிகளில் உள்ளவர்கள் வந்து வணங்குவர். அகரம் மருதேரியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இவ்வழிபாடு நிகழும். இதற்கான காலம் தெலுங்கு வருடப்பிறப்பை அடுத்து வரும் அமாவாசை.

இவர்கள் தென் பெண்ணை ஆற்றின் கரையில் வெள்ளத்தில் ஒதுங்கியவர்கள். இவர்கள் வழிவந்தவர்களே பேய், பிசாசு, பிணி நீங்கவும் பிள்ளைப்பேறும் செழிப்பும் வேண்டியும் வழிபடுவர். 15 நாட்களுக்கு முன்னரே பெளர்ணமியில் சாமியின் உத்தரவைப் பெறுவர். பாப்பாரப்பட்டியில் அரச மரத்தடியில் மணலைப் பரப்பி பூக்களை விரித்து பெருமாள்கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுவர். இரவில் மருதேரியில் உள்ளவர்கள் கொண்டுவரும் கோயில் மாட்டை பூக்கள் மீது மிதிக்கச் செய்து பெருமாள் கோவிலைச் சுற்றிவரச் செய்வர்.

பாப்பாரப்பட்டியிலிருந்து 400 கடாக்களுடன் மருதேரிக்கு வந்து கும்பிடுவர். தென்னந்தோப்பில் அரச மரத்தடியில் ஊஞ்சல்கள் ஆடும். விளக்கெண்ணெயில் தான் விளக்கு. மணல் பரப்பினில் பூக்கள். அருள்வந்து ஆடுபவர்கள். குறி சொல்வார்கள். சாமிப்பெட்டிக்குக் கற்பூரம் காட்டுவார்கள். வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

செங்கல் வடிவ உலோகத் துண்டில் சாமி வரையப்பட்டுள்ளது. நீராட்டி பெட்டிக்குள் வைப்பர். இரவு 9 மணிக்கு முதல் பூசை குயவர் வீட்டின்முன் இரண்டாவது பூசை. மூன்று கடாக்களை வெட்டி குயவர்களுக்குத் தருகின்றனர். இரவு 12 மணிக்கு மூன்றாவது பூசை. கறிசோறு வழங்குகிறார்கள் என்பார் முனைவர் சு. இராசரத்தினம்.

அலையில் அமர்ந்த அம்மன்

சென்னை தேனாம்பேட்டையில் இந்த அம்மன் கோயில் உள்ளது. இன்று ஆலையம்மன் என அழைக்கப்படுகிறாள். சென்னைப் பட்டினம் ஒரு காலத்தில் தனித்தனி கிராமமாக இருந்தது. தேனாம் பேட்டையில் முன்பு ஒரு ஏரி. கிழக்கே மயிலாப்பூர், மேற்கே தி.நகர், வடக்கே நுங்கம்பாக்கம் வரை பரவிய பெரிய ஏரி. ஒரு பெருமழையில் ஏரி உடையும் நிலை. அப்போது நீரலையில் வந்து அம்மன் ஊரைக் காப்பாற்றினாள். ஏரிக்கரையில் கட்டிய கோயில்தான் இது. அம்மன் வரவில்லை. ஒரு வீரப்பெண்ணே உடைப்பில் விழுந்து உயிரை விட்டு ஊரைக் காப்பாற்றி அம்மன் ஆகிவிட்டதுதான் உண்மையான வரலாறு என்பார்கள்.

கோயில் கிழக்கு நோக்கியது. அமர்ந்த நிலையில் அம்மன். முக மண்டபத்தில் அண்ணன்மார் எழுவர் உயிர்ப்பலி கொடுத்து, மது படைத்து, பொங்கல் வைத்து பூசை வைத்தனர். இப்போது உயிர்ப் பலி இல்லை. சிலை 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் உள்ளாள். இடக்காலில் பாதத்தில் அசுரனின் தலையைக் காணலாம். வலமுன்கை அபய முத்திரை தாங்கும். இடமுன்கை கபாலம் ஏந்தியிருக்கும். பின்கை உடுக்கை ஏந்தியுள்ளது.

வேப்பமரமும் அசரமரமும் பின்னி வளர்ந்துள்ளது. அம்மை நோய் கண்டால் சங்கு தீர்த்தத்தையும், அம்மன் பிரசாதத்தையும் பெற்று குணமடைவர். ஆடி, தை மாதங்களில் சிறப்பு
வழிபாடு உண்டு.

அவல்பூந்துறை பெரிய காண்டியம்மன்

ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 15வது கிலோ மீட்டரில் அவல்பூந்துறை உள்ளது. இங்கேதான் அம்மனின் கோயிலும் இருக்கிறது.ஒருமுறை பெரிய காண்டியும் ஏழு கன்னியரும் காவேரியைக் கடக்கும்போது அக்கரையில் இருந்த செல்லாண்டியம்மன் பார்த்தாள். ‘‘எனக்கு பொன்கரகம். மண்கரகம் கொண்ட இவள் பெரியவளா?’’ என்று கேட்டு போட்டிக்கு அழைத்தாள். யாருடைய கரகம் திருப்பாற்கடல் சென்று வருகிறது என்பதுதான் போட்டி. செல்லாண்டியம்மன் கரகம் ஆற்றில் மூழ்கியது, மண்கரகம் வென்றது.

கோயிலின் முன் மண்டபம், வசந்த மண்டபம், மகா மண்டபம் கடந்தால் அர்த்த மண்டபம். அங்கே கன்னிமார், விநாயகர், திருநீலகண்டர், ஆதிகுருசாமி ஆகியோர். மூன்றுநிலை கோபுரம் கொண்ட கருவறையில் அம்மன். கருப்பண்ண சாமிக்குத் தனி சந்நிதி. குதிரைகள் மீது காத்தாயி, காளை மீது வீரமலை சாம்புவன்.இவள் லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வம். வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றுபவள். அன்னை பார்வதியே இந்த அம்மன் என்பார்.

அழகிய நாச்சியம்மன்

புதுக்கோட்டை மாவட்ட பொன்னமரா வதியில் உள்ள அம்மன். சிறு தெய்வ வழிபாடாக இருந்தது. தற்போது இடைநிலை தெய்வ வழிபாடாக மாறி உள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் தெய்வம்.இங்கே ஆடி மாதத்தில் தேர்த்திருவிழா. காப்புக் கட்டுதல், பண்டகப் படிகள், தேரோட்டம், சப்தவதனம், எட்டாம் திருவிழா என ஐந்து கூறுகளை இவ்விழா கொண்டுள்ளதாக முனைவர் கதிர் முருகு குறிப்பிடுவார். இறுதியில் காப்பு அறுத்தல் நிகழும். தண்ணீர் தீபம் எரித்தல், பச்சை வாழை பரப்புகள் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

அம்மனுக்கு சந்தனக் காப்பும் நகை அலங்காரங்களும் சிறப்பாக இருக்கும். திருமனம் பேசுதல், காதணிவிழா, முடியெடுத்தல், தொட்டில் கட்டுதல், மதலைகள் வைத்தல், எலுமிச்சம் மூடியில் விளக்கேற்றுதல், மாவிளக்கு வைத்தல், பொங்கலிடுதல், பெயர் வைத்தல். குழந்தையைத் தத்துக் கொடுத்தல், பாக்குவைத்தல் போன்றவற்றை நம்பிக்கையோடு செய்வர்.

அனவரத செல்வி

நெல்லை மாவட்டத்தில் அனவரத நல்லூர். இங்குள்ள அம்மன் இவள். மாடசாமி, பைரவர் உப தெய்வங்கள். இவளுக்கு எப்போதும் அருளும் செல்வி என்பது பொருள். ஊரை விட்டுப் போனவர்களும் வந்து இவளை வணங்குகின்றனர். காசியிலே முனிவருக்கு துர்க்கன் என்ற மகன் பிறந்து அழிவில்லா வரம் பெற்று அசுரனானான். ஆதிசக்தியால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரமும் பெற்றான். துர்க்கன் துஷ்டன் ஆனான். அவனை அழிக்க யாராலும் முடியவில்லை.

காளி கவுசிகை வடிவில் ஈசனுக்காக தவம் செய்தாள். அவள் காளத்தியை உருவாக்கி தூது அனுப்பினாள். அவனை துர்க்கன் அவமானப்படுத்தினான். கவுசிகை போருக்குச் சென்றாள். அவனது படைகளைப் பஸ்பம் ஆக்கினாள். அவளுக்கு அஷ்டமா செல்விகளும், அஷ்ட வீரர்களும் துணைக்கு வந்தார்கள். துர்க்கன் மாயப்போர் செய்தான். அவள் அவனைச் சூலத்தால் குத்திக் கிழித்து துண்டுகளாக்கி பூதங்களுக்குக் கொடுத்தாள். அனைவரும் அவளைப் போற்றினர். துர்க்கை எனத் துதித்தனர். அவளை அங்கே நிலைபெறச் செய்தனர்.

சுடலை மாடசாமி காவல் தெய்வமானான். வடசிசை நோக்கிய ஆலயம். வங்கிகுலசேகர பாண்டியன் காலத்தது. 800 ஆண்டுகள் இருக்கும். துர்க்கா நதி அருகில். கோவிலுக்கெனப் பெரிய சப்பரம் இருந்ததாம். சத்தியப் படிக்கட்டுகள் உள்ளன. அம்மன் பொய்ச் சத்தியம் செய்பவர்களைத் தண்டிப்பாள். இங்குள்ள மாடசாமிதான் தெள்ளம் பாண்டி சாஸ்தாவை மீட்டாராம்.அனவரத செல்விக்கு எட்டுக் கரங்கள், அமர்ந்த கோலம், சாந்தமுகம், உக்கிரமான வடிவமும் அர்த்த மண்டபத்தில் இருக்கிறது.

சித்திரை வருடப் பிறப்பு, சிவராத்திரி, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகள், தைப்பூசம் ஆகிய நாட்களில் விசேஷம். புத்திரபேறு, திருமண பாக்கியம், மனநலம், குடும்ப நலம் போன்றவை அம்மனால் வழங்கப்படுகிறது. ஒரு மண்டலம் துர்க்கை மந்திரம் சொல்லி அபிஷேகமும் செய்துவந்தால் பில்லி சூனியம் ஏவல் போன்றவை விலகும்.

அம்மை, சீர்குண்ம, குடல் ஏற்றம் விலகும். பெண்களுக்குச் சுகப்பிரசவம் ஏற்படும்.கோயில் வௌிப்புறத்தில் சப்த கன்னிகள். அருகில் பலிபீடம், வலதுபுறம் பைரவர். சித்ரா பவுர்ணமி சிவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். ஒரு கதை. ஒருகாலத்தில் இருப்பகுதியில் ஒரு நாள் இரவு தீப்பிடித்தது. ஆனால் பெரியானை என்பவரின் வீட்டிலுள்ள உலக்கை மட்டும் எரியவில்லை. அதனை வைத்து வழிபட்டனர்.

சாமி உத்தரவு கேட்டுத்தான் அம்மனுக்குத் திருவிழா. மக்கள் எந்த நல்ல காரியத்தையும் உத்தரவு கேட்டுத்தான் செய்வர். திருவிழாவின்போது காவிரி ஆற்றுக்குக் கரகத்தை எடுத்துச் சென்று பூக்களால் அலங்கரித்துக் கொண்டு வந்து கோவிலில் வைத்து விழா நடத்துவர். பிறகு பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு பூசை செய்வர்.

ஆதாளி அம்மன்

கோவை மாவட்ட பொள்ளாச்சி வால்பாறை வழியில் ஆழியாற்று அணைக்கருகில் உள்ள குன்றில் சமணப் படுக்கை உள்ளது. தீர்த்தங்கரை ஆதாளியம்மன் என்று மக்கள் அழைக்கின்றனர். இதனை ஆதிநாதரின் யட்சி என்று பழங்குடிகளின் கொற்றவை என்றும் கருதுவர். பின்னர் இது சமண வழிபாட்டு இடமாக மாறியிருக்க வேண்டும். அச்சமயம் வீழ்ச்சியுற்ற பின் பண்டைய நாட்டுப்புறத் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது.

இந்த அம்மனின் பெயரால்தான் ஆற்றுக்கு ஆழியாறு என்ற பெயர் வந்தது. ஆற்றால் அம்மனுக்கு பெயர் வந்தது என்றும் கூறுவதுண்டு. நன்னன் இப்பகுதியை ஆண்டபோது இங்குள்ள மலைகளில் ஒன்றுக்கு ஆழிமலை என்று பெயர் வைத்தனர். அம்மனின் முக்கியத்துவமும் வழிபாடும் பண்டைக் காலந்தொட்டு சிறப்புடன் விளங்கியது என அறிந்துகொள்ளலாம். இன்றும் இச்சாலையில் செல்லும் வண்டியோட்டிகள் ஆதாளி அம்மனுக்குப் பலியிட்டு வழிபாடு செய்து விட்டுச் செல்கின்றனர்.

ஜெயசெல்வி

The post நம்ம ஊரு சாமிகள் appeared first on Dinakaran.

Read Entire Article