சென்னை,
அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர், பிரதமரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவது என்பது வழக்கமான நடைமுறையாகும். குடும்பத்தில் மூத்த சகோதரரை, இளைய சகோதரர் சந்தித்து தனது தேவைகளை சொல்லும் உணர்வில்தான் பிரதமருடன் மாநில முதல்-அமைச்சர்களின் சந்திப்பை எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், ஒவ்வொரு சந்திப்பின்போதும் மாநில முதல்-அமைச்சர்கள், பிரதமரிடம் விடுக்கும் கோரிக்கைகளில் எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது விவாதத்துக்குரிய ஒன்றாகும். அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள், பிரதமரை அவ்வப்போது சந்தித்து பல கோரிக்கைகளை பட்டியலிடுவது வழக்கம். இதில், பெரும்பாலான கோரிக்கைகள் அடுத்த முறை அவர்கள் பிரதமரை சந்திக்கும்போது கொடுக்கும் மனுவிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கொண்டது மிகவும் வித்தியாசமானது. பொதுவாக, மாநில முதல்-அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து பேச நேரம் கேட்டால், அதை ஒதுக்கித்தர சில நாட்கள் ஆகும். இந்த முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பியவுடன் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. பிரதமரும் இந்த சந்திப்புக்கான நேரம் குறித்து உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்துவிட்டார்.
அதன்படி, கடந்த 27-ந்தேதி நடந்த சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதுவும் வழக்கத்துக்கு மாறாக இருந்தது. எப்போதும் நிறைய கோரிக்கைகள் பக்கம் பக்கமாக மனுவில் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த முறை கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு நறுக்கு தெறித்தாற்போல 3 கோரிக்கைகளுடன், அதுவும் மக்களுக்கு உடனடி தேவையான கோரிக்கைகளைக்கொண்ட மனுவாகவே இருந்தது. வழக்கமாக கொடுக்கும் மனுக்களில் என்னென்ன கோரிக்கைகள் பிரதமருக்கு தமிழகத்தின் சார்பில் விடுக்கப்பட்டது? என்பது மக்களுக்கு மட்டுமல்லாமல், பிரதமருக்கும் நினைவில் வைத்துக்கொள்வது கடினம்.
ஆனால், இந்த முறை கொடுக்கப்பட்ட 3 கோரிக்கைகள், அதாவது சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாவது கட்ட பணிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு, ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ரா சிக்சா அபியான்' திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் தர வேண்டிய நிதியுதவி, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சந்தித்து வருகிற வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஆகியவை பிரதமரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் இடம்பெற்றிருந்தன. இந்த சந்திப்பின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பிரதமருடனான சந்திப்புக்கு 15 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி 45 நிமிடம் பேசியிருக்கிறார்கள். 3 கோரிக்கைகளை தவிர, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணம் உள்ளிட்ட வேறு பல விஷயங்களும் பேசப்பட்டு இருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இது இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமர் மகிழ்ச்சியுடன் பேசினார்" என்று கூறியதைப்பார்க்கும் போதும், பிரதமர் நரேந்திரமோடி முதல்-அமைச்சரின் கோரிக்கைகளை விரைவாக கலந்தாலோசித்து முடிவுகளை தெரிவிப்பதாக உறுதியளித்து இருப்பதைப்பார்க்கும் போதும், இது தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்கும் நம்பிக்கையூட்டும் சந்திப்பாக அமைந்திருக்கிறது என்பதுதான் எல்லோருடைய எண்ணமாகவும் இருக்கிறது. வழக்கமான கோரிக்கை மனுக்கள் போல இல்லாமல், இந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.