நம்பிக்கை நட்சத்திரம்

3 months ago 23

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 3வது நபராக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தனது தந்தையை போலவே உதயநிதி ஸ்டாலினும் படிப்படியாக அரசியல் வாழ்வில் முன்னேறி இப்பதவியை அடைந்துள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய அரசியலை வழி நடத்துவதற்கு இப்போது இளைஞர்கள் எழுச்சி பெறும் நிலையில், அவர்களுக்கு எல்லாம் உதயநிதி ஸ்டாலின் ஒரு முன்னோடியாக இருப்பார் என உறுதியாக நம்பலாம்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகள் தோறும் வலம்வந்து திமுகவின் வெற்றிக்கு தோள்கொடுத்தார். 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்காளர்கள் மத்தியில் அவரது பிரசாரம் திமுகவிற்கு வலுவூட்டியது. நவீன தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி, உரையாடல்கள் அடிப்படையிலான அவரது பிரசாரம் பொதுமக்களை கவர்ந்தது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 10 ஆண்டு கால அதிமுகவின் அவல ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில், அவரது பங்களிப்பு பாராட்டுக்குரியது. தேர்தல் முடிந்ததும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும், அவரோடு 35 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அப்போதே உதயநிதி ஸ்டாலினும் அமைச்சராக பொறுப்பேற்பார் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகம் நிலவியது. ஆனால் அப்போது நடக்காவிட்டாலும், அடுத்த ஆண்டே அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, தனது அமைச்சர் பணியை அவர் செவ்வனே செய்தார்.

உலகளாவிய விளையாட்டுக்களை மும்பையிலும், டெல்லியிலுமே நடத்த முடியும் என்கிற எண்ணங்களை அவர் தொடக்கத்திலேயே துடைத்தெறிந்தார். விளைவு கேலோ இந்தியா, பார்முலா 4 கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரத்திலான விளையாட்டுக்கள் சென்னையில் நடந்தேறின. ஆசிய ஹாக்கி போட்டிகள், ஸ்குவாஷ் உலக கோப்பை போன்றவற்றை தமிழகத்தில் நடத்திக் காட்டினார். விளையாட்டுத்துறையின் பொற்காலம் தொடங்கிவிட்டதை உணர்ந்த தமிழக மக்களும், மூத்த அமைச்சர்களும் கடந்த சில மாதங்களாகவே உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்கிற தங்கள் ஆசையை பொதுவெளியில் வாஞ்சையோடு தெரிவிக்கத் தொடங்கினர். அந்த ஆசையும் நேற்று முன்தினம் நிறைவேறிவிட்டது.

துணை முதல்வர் பதவிக்கென அரசியலமைப்பில் தனித்த அதிகாரம் இல்லையென்றாலும், ஜன சமூகத்தில் முதல்வருக்கு அடுத்தபடியாக கூடுதல் மதிப்பு அவருக்கு வழங்கப்படும். மூத்த தலைமுறையை அனுசரித்து செல்வதிலும், இளைய தலைமுறைக்கு தோள் கொடுப்பதிலும் உதயநிதி ஸ்டாலின் தனித்துவம் மிக்கவர். தனக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தாலும், அதை பதவியாக கருதாமல், தனக்கு கிடைத்துள்ள பொறுப்பு என அவர் உரைத்திருப்பது, மக்களுக்கு அவர் தொண்டாற்ற விழைவதை உணர்த்துகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய அரசியல் களத்தில் இளம் தலைமுறைக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாகின்றன. திராவிட அரசியலின் நம்பிக்கை நட்சத்திரமாக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்துவிட்டார் என்பதில் பெருமை கொள்வோம்.

The post நம்பிக்கை நட்சத்திரம் appeared first on Dinakaran.

Read Entire Article