நாடு முழுவதும் இந்த ஆண்டில் கடந்த 8 மாதத்தில் மட்டும் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளி படிப்பை நிறுத்தியதாகவும், இதில் உபியில் அதிகபட்சமாக 7.84 லட்சம் பேர் நிறுத்தியதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மட்டும் தான் முக்கியம், கல்விதான் திருட முடியாதது என்றெல்லாம் கற்பித்து வருகின்ற இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நிலை, அதுவும் நமது நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது என்றால் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் இன்று வரை கல்விக்கு முன்னுரிமை கொடுக்கிற மாநிலம்.
காமராஜர் முதல்வராக இருந்த காலம் தொடங்கி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியிலும் கூட கல்விக்கு கொடுக்கிற முக்கியத்துவம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அதனால் தான் தமிழ்நாடு பள்ளிக்கல்வியில் மட்டுமல்ல உயர் கல்வியிலும் முன்னணியில் திகழும் மாநிலமாக உள்ளது. தென்மாநில மாணவர்கள் மட்டுமல்ல, வடமாநில மாணவர்களும் தேடி, ஓடி, நாடி கல்வி கற்க வரும் மாநிலம் என்ற உயர் பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. இந்த சூழலில் நாடு முழுவதும் இந்த நிதியாண்டில் கடந்த 8 மாதத்தில் மொத்தம் 11,70,404 குழந்தை கள் பள்ளி செல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. நாட்டில் பள்ளிக்கு செல்லாத 11.70 லட்சம் குழந்தைகளில் உ.பி.யில் மட்டும் 7.84 லட்சம் குழந்தைகள் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் 65,000க்கு மேல் உள்ளனர். அசாமில் 63,000க்கு மேல் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி ஆண்டு தொடங்கிய உடனேயே பள்ளி செல்லா குழந்தைகளை தேடிக்கண்டு பிடித்து மீண்டும் பள்ளிப்பாதையில் அழைத்துச்செல்ல தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இடைநிற்றலை தவிர்க்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியின் வெற்றி இது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நமது நாட்டிற்கே முன்னோடியாக அறிமுகப்படுத்திய காலை உணவு திட்டமும் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிப்பாதைக்கு அழைத்து வந்து இருக்கிறது. அதோடு பெண் கல்வியை ஊக்குவிக்கும் இலவச பஸ் பயணம், மாணவர்களுக்கான பஸ் பாஸ் உள்ளிட்டவை மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கின்றன. 234 தொகுதியிலும் அரசு பள்ளிகளை நேரில் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார். இன்னும் மாணவர்களை ஊக்கப்படுத்த எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்ற மாநிலங்களை விட உயிர்ப்போடு செயல்படுவது தெரிய வந்துள்ளது.
ஆனால் பா.ஜ ஆளும் உபியில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் 7.84 லட்சம். ஒன்றிய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை ஊக்குவிக்கும் உத்தரபிரதேசம் போன்ற பா.ஜ ஆளும் மாநிலங்களில் வேறு என்ன மாற்றம் வந்து விடும்?. அதனால் தான் கல்வியை இறுகப்பற்றிப்பிடிக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தி, இப்போது உள்ள கல்வித்தரத்தை சீர்குலைக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு அதற்கு இடம் கொடுக்காததால் தான் இன்று வரை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.2400 கோடி நிதியை வழங்க மறுத்து வருகிறது. உத்தரபிரதேச பாதையில் தமிழ்நாட்டையும் தள்ளிவிட்டுவிட ஒன்றிய அரசின் பிடிவாதங்கள் தொடர்கின்றன. அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை காக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இங்குள்ளது நமக்கு பெருமை.
The post நமது பெருமை appeared first on Dinakaran.