நத்தம்: நத்தம் அருகே, இன்று அதிகாலை ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, வேலம்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை (ரெடிமேட்) தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஆடைகள் தயாரிப்பு மும்முரமாக நடந்து வந்தது. நேற்றிரவு பணி முடிந்து வழக்கம்போல் பணியாளர்கள் நிறுவனத்தை பூட்டி சென்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் நிறுவனத்தில் இருந்து திடீரென புகைமூட்டம் வெளியேறியது.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மளமளவென பரவி தீ பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் (பொ) அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், ரூ.20 லட்சம் மதிப்பிலான துணி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post நத்தத்தில் இன்று அதிகாலை பரபரப்பு; ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ: ரூ.20 லட்சம் துணிகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.