ராமநாதபுரம், ஏப்.26: ராமநாதரத்தில், நண்பரை அடித்துக் கொன்ற வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி என்ற சாதிக்(60). திருமணமாகாதவர். மதுரை கீழவாசல் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (60). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குடும்பத்தை பிரிந்து ராமநாதபுரம் வந்துள்ளார். துரைப்பாண்டியும், முத்துக்குமாரும் கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால், ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் யாசகம் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2022 ஆகஸ்டில், காசை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைப்பாண்டி, பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதில் முத்துக்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து, துரைப்பாண்டியை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் நேற்று, துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
The post நண்பரை கொன்ற வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.