புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தென்மேற்கு டெல்லி வசந்த் விகார் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே, ராஜஸ்தானைச் சேர்ந்த கணவர் சபாமி (45), அவரது மனைவி லாதி (40), அவரது எட்டு வயது மகள் பிம்லா, மற்றொரு தம்பதியான ராம் சந்தர் (45), அவரது மனைவி நாராயணி (35) ஆகியோர் தங்களின் அன்றாட வாழ்க்கையை முடித்துவிட்டு, நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை சுமார் 1.45 மணியளவில், துவாரகாவைச் சேர்ந்த உத்சவ் சேகர் (40) என்ற நபர், தனது வெள்ளை நிற சொகுசு காரை குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி வந்து, உறங்கிக் கொண்டிருந்த அவர்கள் மீது ஏற்றியுள்ளார். இந்த விபத்தில் ஐந்து பேரும் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் உத்சவ் சேகரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த ஏழைகளின் வாழ்வில், குடிபோதை ஓட்டுநரால் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post நடைபாதை ஓரத்தில் தூங்கிய 5 பேர் மீது காரை ஏற்றிய போதை டிரைவர்: டெல்லியில் நள்ளிரவில் நடந்த கொடூரம் appeared first on Dinakaran.