
மும்பை,
நடிகை ஹன்சிகா தமிழில், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' போன்ற படங்கள் உள்ள நிலையில், 'நிஷா' என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாள்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி விண்ணப்பம் அளித்தார். பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.
ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மோனா மோத்வானி இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்தவதாகவும் கணவருடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தும் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என முஸ்கான் மும்பை அம்பாலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.முஸ்கானின் புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா, அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் தாயார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் இருந்து ஹன்சிகாவும் அவரது தாயாரும் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதைத் தொடர்ந்து தாயும் மகளும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் முஸ்கா சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்து குறிப்பிட்டிருந்தார்.
மேலும் முஸ்கானுக்கும் தனது சகோதரனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு 2021 முதல் நடந்து வருவதாகவும், ஆனால் 2022-ல் பரஸ்பர விவாகரத்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனு குறித்து மும்பை காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது. பின்பு வழக்கு விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.