'நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக நான் கருதவில்லை' - சீமான்

2 hours ago 2

சென்னை,

கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கஸ்தூரி கூறிய நிலையில், அவர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்பேரில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், கஸ்தூரியை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கஸ்தூரி மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனது பேச்சுக்கு நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்த பிறகு அதை விட்டுவிடலாம். அவர் பேசியதை விட மோசமாக பலர் பேசியுள்ளனர்.

என்னைப் பற்றி கூட மோசமான முறையில் இணையத்தில் பலர் பேசியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக நான் கருதவில்லை. அவர் மீதான நடவடிக்கையை அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கிறேன்."

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Read Entire Article