
கோவை,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஜெயிலர்-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை-கேரள எல்லையான அட்டப்பாடி பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்க கடந்த 10-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் அட்டப்பாடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வருகிறார்.
இதற்கிடையில் அட்டப்பாடியில் படப்பிடிப்புக்கு வந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரஜினிகாந்த் காரில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தலைவா, தலைவா என்று கூச்சலிட்டனர். அவர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்தபடி சென்றார். அந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென்று தனது வலது கையில் கற்பூரம் ஏற்றி ரஜினிகாந்திற்கு ஆரத்தி எடுத்தார். இது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.