நடிகர் தனுஷ் எதிர்ப்பையும் மீறி நயன்தாரா ஆவணப்படத்தில் ‘3 விநாடி காட்சி’

2 hours ago 1

சென்னை: நடிகர் தனுஷ் போட்ட தடையையும் மீறி தன்னுடைய ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படம் தொடர்பான 3 விநாடி காட்சியை நயன்தாரா சேர்த்துள்ளார். இந்த ஆவணப்படம் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்டது. நடிகை நயன்தாராவின் சிறுவயது முதல் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தது வரை, அவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை தொகுத்து, ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணப்படம், இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதில், நடிகர் தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ என்ற படத்தின் சில காட்சிகள் இடம்பெற அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு நடிகர் தனுஷ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருந்த அந்த 3 விநாடி வீடியோவுக்கு எதிராக ரூ.10 கோடி நஷ்ட கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘நானும் ரவுடி தான்’ படத்தின் பாடல்களையும், போட்டோக்களையும் ஆவணப்படத்தில் உபயோகிக்க தனுஷ் அனுமதி மறுத்துள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் தனுஷ் குறித்து நயன்தாரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவை வெளியிட்டிருந்தார். என் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் இதுபோன்ற செயலை செய்கிறார். போலி முகமூடி அணிந்து இழிவான செயலில் ஈடுபடுகிறார். மற்றவர் கெடுதலில் இன்பம் காணும் நபர் தனுஷ் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தனுஷை தாக்கி நயன்தாரா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

அதை தொடர்ந்து நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நெட்பிளிக்ஸில் பயன்படுத்தியதற்கு தனுஷ் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வீடியோவை இலவசமாக பாருங்கள். அன்பை பகிருங்கள்’ என்று சொல்லி அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.

‘வாழு, வாழவிடு’ என்று தனுஷ் பேசிய வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன், ‘அன்பை பரப்புங்கள். தனுஷின் பேச்சை நம்பும் அப்பாவி தீவிர ரசிகர்கள், ரசிகைகளுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மக்கள் மாறுவதற்காக பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். பின்னர் அப் பதிவை விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளார். இதையடுத்து சென்னையிலுள்ள பிரீவியூ தியேட்டரில், நேற்று மாலை திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் காதல் திருமணம் உள்ளடக்கிய அந்த ஆவணப்படத்தில், தனுஷ் ரூ.10 கோடி கேட்டதாக குற்றம்சாட்டிய 3 விநாடி காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதைத்தான் நயன்தாரா வெளியிட்டிருந்த புகாரில், ‘நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் நேற்று சமூக வலைத்தளங்களில் தனுஷ் ரசிகர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கமென்ட் செய்த பதிவுகள் வைரலானது. பதிலுக்கு நயன்தாராவின் ரசிகர்களும் தனுஷை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

The post நடிகர் தனுஷ் எதிர்ப்பையும் மீறி நயன்தாரா ஆவணப்படத்தில் ‘3 விநாடி காட்சி’ appeared first on Dinakaran.

Read Entire Article