கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடக்காத ஆண்டே இல்லை. ஒன்றிய அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் தேர்தலுக்கான அறிவிப்பு என்று கூறுவதால்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை நோக்கி செயல்பட வேண்டியுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நோ ஆல் பாஸ் என அறிவித்து இருப்பதால், மாணவர்கள் இடைநிற்றல் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு வேறு வழி ஏதாவது இருக்கிறதா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். இதன் மூலம் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
நீட் தேர்வினால் மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சினிமா பின்புலத்தில் இருந்து வரக்கூடிய நடிகர் என்பதால், அவரை (விஜய்) பார்ப்பதற்கான ஆர்வம் இயல்பாகவே இருக்கும். ஒரு அரசியல் கட்சியாக மக்களின் பிரச்னைகளை எவ்வாறு கையில் எடுக்கிறார்கள். உள்ளூர் மக்களின் குரலை எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பது எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு அடிப்படை. எனவே வரக்கூடிய காலத்தில் அதனை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நடிகர் என்பதால்தான் விஜய்க்கு கூட்டம் வருகிறது: வானதி சீனிவாசன் பேட்டி appeared first on Dinakaran.