
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 41 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 18.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 165 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 73 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.
நடப்பு தொடரில் டெல்லி அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார். மெகா ஏலத்தில் அவரை ரூ. 10.75 கோடிக்கு டெல்லி வாங்கியது. இதன் காரணமாக அவர் டெல்லி பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடராஜனுக்கு இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இறுதிகட்டத்தில் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை கொண்ட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்நிலையில், எதிர்வரும் ஆட்டங்களில் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
நடராஜன் சிறப்பாக விளையாடக்கூடியவர் தான். ஆனால், துரதிஷ்டவசமாக ஒரு போட்டியில் இம்பேக்ட் வீரருடன் சேர்த்து 12 பேர்தான் விளையாட முடியும். இப்போது இருக்கும் அணியில் அவரை எங்கே விளையாட வைக்கலாம் என உங்களால் முடிந்தால் யோசனை சொல்லுங்கள். அது எங்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.