ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. சுமார் 21 கி.மீ சுற்றளவு கொண்ட வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, அவை வளர்ச்சி அடைந்த பிறகு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தினமும் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கையை ஈடு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாத இடைவெளியில் 20 லட்சம் மீன் குஞ்சுகள் படிப்படியாக வைகை அணை நீர்த்தேக்கத்தில் விடப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் நடப்பு பருவத்திற்காக முதல் வாரத்தில் ஒன்றரை லட்சம் ரோகு, மிக்கால் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. முன்னதாக இவை வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள தொட்டிகளில் லார்வா பருவம் வரை வளர்க்கப்பட்டன. வைகை நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் தட்ப வெப்ப நிலையை தாங்கும் நிலையை எட்டியது உறுதி செய்யப்பட்ட பின்பு, அவை சேகரிக்கப்பட்டு வைகை அணை நீர்தேக்கத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் விடப்பட்டன. தற்போது விடப்பட்டுள்ள குஞ்சுகள் 6 மாதங்களில் வளர்ந்து வளர்ச்சி அடைந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
The post நடப்புப் பருவ மீன் பிடிப்புக்காக வைகை அணையில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் appeared first on Dinakaran.