நடப்பாண்டில் மாவட்டத்தில் 235 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை

3 hours ago 3

*மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் : கடலூர் வட்டம் நத்தப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடப்பு பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்து, நிறைந்தது மனம் திட்டத்தில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 1.10.2021 முதல் 31.8.2022 வரை 2,41,355 மெ.டன்னும், 1.10.2022 முதல் 31.8.2023 வரை 2,44,062.6 மெ.டன்னும், 1.10.2023 முதல் 31.8.2024 வரை 2,71,312.28 மெ.டன்னும், 1.9.2024 முதல் 7.11.2024 வரை 42,497.60 மெ.டன்னும் என மொத்தம் 7,99,227.48 மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2024-2025ம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் 92,960 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு சன்ன ரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.23.20, இதர ரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.23 விலையுடன் மாநில அரசு தனது பங்கிற்கு உயர்த்தி சன்ன ரக நெல் ரூ.24.50, இதர ரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.05 என 1.9.2024 முதல் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெய்வேலி, விருத்தாசலம், காடாம்புலியூர், வேப்பூர், கடலூர், குறிஞ்சிப்பாடி, மணலூர் என மொத்தம் 7 நெல் பாதுகாப்பு கிடங்குகளில் 33,100 மெ.டன் நெல் பாதுகாத்து வைக்கப்படும் வசதியுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெற்பயிர்களுக்கு 48 மணி நேரத்தில் அவரது வங்கி கணக்கில் உரிய தொகை செலுத்தப்படுகிறது.

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது நெற்பயிர்களை விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவுசெய்தால், கொள்முதல் குறித்த நாள் மற்றும் நேரம் ஆகிய விபரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக அவர்களது கைபேசிக்கு அனுப்பப்படுகிறது.

நடப்பாண்டில் மாவட்டத்தில் 235 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தங்கப்பிரபாகரன், துணை மேலாளர் கொள்முதல் மற்றும் இயக்கம் விஸ்வநாதன், வேளாண் இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நடப்பாண்டில் மாவட்டத்தில் 235 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article