நடந்தாய் வாழி, காவேரி!

3 months ago 17

காவிரியின் உற்பத்தி

புராண வரலாறுகளாலும், இலக்கியங்களாலும், புனிதமான சைவ வைணவ ஆலயங்களாலும் புகழ்பெற்றது காவிரியாறு. காவிரி நதி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக் காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. சங்க இலக்கியம் முதல், திரைப்பட பாடல்கள் வரை காவிரி நதியைப் போற்றி பாடாத தமிழ் இலக்கியங்களே இல்லை. காவிரியின் மற்றொரு பெருமை கல்லணை. இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது. தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

தமிழ் மொழியின் சிறப்புக்கு காவிரி நதி

ஜீவ கோடிகள் செய்யும் பாவ கோடிகளை ஒழிக்க கர்நாடகத்தில் உற்பத்தியான காவிரி குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாமராச நகர் மாவட்டங்கள் வழி நடந்து, தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று கீழ்க் கடல் பகுதியான பூம்புகாரில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. சுமார் 800 கிலோமீட்டர் பயணப்படும் இந்த காவிரி ஆற்றின் பெரும்பாலான பகுதி (சுமார் 416 கிலோமீட்டர் நீளம்) தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழர்களின் பொருளாதார வாழ்வுக்கும் ஆன்மிக வாழ்வுக்கும் தமிழ் மொழியின் சிறப்புக்கும் காரணமாக அமைந்த நதி காவிரி நதி.

அம்மா மண்டபத்தில்

திருவரங்கம் ரங்கநாதப் பெருமாளை “உபய காவேரி வாசன்” என்பார்கள். உபயம் என்றால் இரண்டு. இரண்டு காவேரிக்கு நடுவில் துயில் கொண்ட பெருமாள் அல்லவா. திருப்பராய்த்துறை அருகே முக்கொம்பில் அகண்ட காவேரி நதியிலிருந்து பிரியும் கொள்ளிட நதியை வடதிருக்காவேரி என்பது வைணவ மரபு. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தனிச் சிறப்பு உடையது. ஆடி பதினெட்டு இங்கு வந்து பெருமாளே காவிரிக்கு சீர் செய்வார். அதை போலவே பெருமாள் துலா காவேரி திருமஞ்சனம் கண்டருள்வார். துலா மாதம் பிறப்பையொட்டி ரங்கம் ரங்கநாதருக்கு காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீா் கொண்டுவரப்படும். பின்னர் ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெறும். ரங்கத்தில் அம்மா மண்டபத்தில் காவேரித் தாயின் சிலை அற்புதமாக காட்சியளிக்கிறது. திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு அருகில் கருவறையில் காவிரி அன்னையும் கங்கை அன்னையும் காட்சியளிக்கிறார்கள் இப்படி பல கோயில்களில் காவிரி அன்னை
காட்சியளிக்கிறாள்.

வைகுண்டத்தில் ஓடும் விராஜா நதிக்கு இணை காவேரி
திருவரங்கத்தின் சிறப்பை விளக்குகின்ற ஒரு ஸ்லோகம் காவேரி நதியின் சிறப்பை விளக்குகிறது.

காவேரி விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்
ஸ வாசுதேவோ ரங்கேச: பிரத்யக்ஷம் பரம் பதம்
பரமபதத்தில் ஓடும் விரஜா நதி தான் காவேரி. அங்கே உள்ள பரவாசுதேவன் தான் ரங்கநாதப் பெருமாள். வைகுண்டம் தான் ஸ்ரீரங்கம். என்பது இந்த ஸ்லோகத்தின் திரண்ட பொருள். இந்தச் ஸ்லோகத்தில் காவேரி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அகத்தியரின் மனைவி காவேரி

தனக்கு ஒரு நல்ல கணவனை விரும்பி குடகு மலையில் தவம் செய்து கொண்டிருந்த காவேரியை பிரம்மரிஷி அகஸ்திய மாமுனிவர் பார்த்தார். காவேரியின் அழகும் தவமும் அவரைக் கவர்ந்தது. அப்பொழுது அவள் இரண்டு வரங்களை அகஸ்திய முனிவரிடம் கேட்டார். தன்னில் பாதியை ஒரு நதி ரூபமாக மாற்ற வேண்டும் என்று அகத்தியரிடம் கோரிக்கை வைத்தாள். அதற்கான காரணத்தைக் கேட்டபொழுது,” ஜீவராசிகளின் பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதியாகத் திகழவேண்டும். இரண்டா வதாக பயிரை வளர்த்து அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதனால் நான் நதியாக விரும்புகின்றேன்” என்று சொல்ல, “அப்படியே ஆகட்டும்” என்று வரம் தந்தார். இன்னொரு பாதியை லோபமுத்திரை என்கின்ற பெண்ணாக்கி அகத்தியர் மணந்து கொண்டார் என்பது வரலாறு.

புகழ்பெற்ற ஆலயங்கள்

காவிரி நதி உற்பத்தியாகும் குடகு மலையிலிருந்து பூம்புகார் வரை நீண்ட பயணத்தை செய்கிறாள். வழி எல்லாம் தரிசு நிலங்களை சோலை வனமாக்கி ஒவ்வொரு பகுதியையும் வளப்படுத்தி மக்களுக்கு தேவையான உணவை அளிக்கின்றாள். தன்னுடைய வடகரை, தென்கரை ஆகிய இரண்டு கரைகளிலும் நூற்றுக்கணக்கான சைவ ஆலயங்களையும் வைணவ ஆலயங்களையும் கொண்டு தென்னகத்தின் ஆன்மிக மேன்மையை பறைசாற்றும் நதியாகத் திகழ்கின்றாள்.

 

The post நடந்தாய் வாழி, காவேரி! appeared first on Dinakaran.

Read Entire Article