திருவண்ணாமலை: ராணுவவீரரை மனைவி, மாமனார் அடித்துக்கொன்று விபத்தில் இறந்ததுபோல் நாடகமாடியதும், உடலை பைக்கில் எடுத்து சென்று கிணற்றில் வீசியதும் அம்பலமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரஹிமான்பேட்டையை ேசர்ந்தவர் ராஜேஷ்குமார் (34), ராணுவ வீரர். காஷ்மீர் பகுதியில் பணியில் இருந்தார்.
இவரது மனைவி சங்கீதா (32). இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கணவர் ராணுவத்தில் பணிபுரிவதால் வீட்டில் தனியாக இருந்த சங்கீதா, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியில் சேர்ந்தார். இதை ராஜேஷ்குமார் விரும்பவில்லை. வேலைக்கு போக வேண்டாம் என்று மனைவியிடம் தொடர்ந்து கூறிவந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஷ்குமார் சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 13ம்தேதி இரவு சின்னஅய்யம்பாளையம் அருகே தேன்மலைப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் பைக்குடன் விழுந்து சடலமாக கிடந்தார். அவர் பைக்குடன் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராணுவ வீரரின் தாய் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜேஷ்குமார் அடித்துகொலை செய்யப்பட்டு பின்னர் கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் கடந்த 13ம்தேதி ராஜேஷ்குமாருக்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ்குமாரை, சங்கீதா மற்றும் அவரது தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்டோர் கட்டையால் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் அவர் இறந்துள்ளார். பின்னர் சடலத்தை பைக்கில் கொண்டு சென்று கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக நாகநதி கிராமத்தை சேர்ந்த சங்கீதாவின் தந்தை ஏழுமலை, உறவினர்கள் கதிர்வேல், கிஷோர், ஜெயகுமார் மற்றும் கலையரசன் ஆகிய 5 பேரை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர். ராணுவ வீரரின் மனைவி சங்கீதா, மாமியார் இந்திராணி, மைத்துனர் சதிஷ்குமார் ஆகிய 3 பேரை தேடிவருகின்றனர்.
கொலை குறித்து சங்கீதாவின் தந்தை ஏழுமலை அளித்த வாக்குமூலத்தில் மகள் சங்கீதாவுக்கும், மருமகன் ராஜேஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக சண்டை ஏற்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் விடுமுறையில் வரும்போது தகராறு நடந்தது. இதனை நாங்கள் சமரசப்படுத்தி வந்தோம். இருப்பினும் பிரச்னை தொடர்ந்தது. இதேபோல் கடந்த 13ம்தேதி எங்கள் வீட்டுக்கு வந்து மனைவியிடம் ராஜேஷ்குமார் தகராறு செய்தார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து நானும், மனைவி இந்திராணி, மகள் சங்கீதா மற்றும் உறவினர்கள் சேர்ந்து ராஜேஷ்குமாரை கட்டையால் அடித்தோம். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் கொலையை மறைக்க பைக்கில் சடலத்தை எடுத்துச்சென்று தேன்பட்டி கிராமத்தில் உள்ள ராஜேஷ்குமாரின் விவசாய நிலத்தின் அருகே உள்ள கிணற்றில் பைக்குடன் வீசிவிட்டு விபத்து ஏற்பட்டு இறந்ததுபோல் அனைவரிடமும் கூறினோம் என்று தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
The post நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரம் ராணுவ வீரரை அடித்து கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய மனைவி, மாமனார்: பைக்கில் உடலை எடுத்து சென்று கிணற்றில் வீசினர் appeared first on Dinakaran.