விருதுநகர், அக்.18: கூரைக்குண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள 7 உட்கடை கிராமங்களான அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி, கூரைக்குண்டு, கே.செவல்பட்டி, சூலக்கரை மேடு, குமாரசாமி ராஜா நகர் ஆகியவற்றை இணைக்க அறிவிப்பு வந்துள்ளது. இந்நிலையில், கூரைக்குண்டு ஊராட்சியில் வசிக்கும் 80 சதவீத மக்கள் விவசாயம், கூலி தொழில் செய்கின்றனர்.
கூரைக்குண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் கலைஞர் கனவு இல்லம், ஆடு, மாடு வழங்கும் திட்டம், நூறு நாள் வேலைதிட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் ஆகியவை கிடைக்காது. வரியினங்களும் பன்மடங்கு உயரும். கூரைக்குண்டு ஊராட்சியை 35 வருடங்களுக்கு பிறகு தற்போது தனி ஊராட்சியாக மாற்றி, முதல் ஆட்சி காலம் முடிவுற உள்ளது. இன்னும் 2 ஆட்சி காலம் தனி ஊராட்சியாக செயல்பட்டு இடஒதுக்கீடு நிலைப்பெற உதவிட வேண்டும்.
நகராட்சியாக மாறினால் இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். அதனால், கூரைக்குண்டு ஊராட்சியை ஊராட்சியாக தொடர வேண்டுமென எம்எல்ஏ, கலெக்டரிடம் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அக்.7ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நேற்று கூரைக்குண்டு ஊராட்சி பகுதி வீடுகள், மின்கம்பங்கள், மரங்களில் கருப்பு கொடியேற்றினர். அல்லம்பட்டி நீர்தேக்கத் தொட்டி, செவல்பட்டி, கூரைக்குண்டு, யானைக்குழாய் தெரு ஆகிய இடங்களில் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் appeared first on Dinakaran.