
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் அக்ஷர் பட்டேல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடிக்க, சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 184 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் சங்கர் 69 ரன்களுடனும் (54 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), தோனி 30 ரன்களுடனும் (26 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும்.
நடப்பு சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக தோனிதான் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியின் தோல்விகளுக்கு தோனி காரணமில்லை என்று இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறியுள்ளார். மாறாக பேட்ஸ்மேன்களில் சொதப்பல்தான் முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"அவர்கள் (சென்னை அணி) முன்கூட்டியே அதிக விக்கெட்டுகளை இழந்து வருகிறார்கள். பார்ம் அல்லது ஷாட் செலக்சன் அல்லது அணித்தேர்வு உட்பட எதுவுமே சென்னை அணியில் சரியாக இல்லை. அவர்கள் அதிகமான வீரர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதால் நாம் அணியில் இருப்போமா இல்லையா என்ற சந்தேகம் வீரர்களிடம் எழுந்துள்ளது.
பொதுவாக சென்னை அணியைப் பார்க்கும்போது இது நமக்குப் பழக்கமில்லாத ஒன்றாக இருக்கலாம். வழக்கமாக, அவர்கள் நிலையானவர்கள், நல்ல முடிவெடுக்கும் அணி. இந்த நேரத்தில் அணி சற்று பதட்டமாக இருப்பது போல் தெரிகிறது. அவர்களின் டாப் ஆர்டர் சரியாக செயல்படவில்லை. துபே விரைவில் ஆட்டமிழந்தால் அவர்கள் மிக விரைவாக விக்கெட்டுகளை இழப்பது போல் தெரிகிறது.
அவர்கள் உண்மையில் ஆட்டத்தில் பின்தங்கியிருப்பதாக உணர்கிறார்கள். அவர்கள் முயற்சிப்பது போல் கூட தெரியவில்லை. அந்த அணுகுமுறை எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 2 போட்டிகளிலும் அவர்கள் மிக விரைவில் ஆட்டத்தை இழந்துவிட்டனர். அதுதான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது" என்று கூறினார்.