தோனி இப்போது அழைத்தால் கூட விளையாட தயார் - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் அறிவிப்பு

1 week ago 5

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 43 வயதை எட்டியுள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான டேல் ஸ்டெயின் தோனியுடன் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், "என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதுமே நான் தோனியின் ரசிகனாக இருந்துள்ளேன். என்னுடைய கெரியரின் கடைசி காலகட்டத்தில் கூட சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்பினேன். அதோடு தோனியின் அருகில் இருந்து அந்த சூழல் எவ்வாறு இருக்கிறது? அவருடைய கிரிக்கெட் மூளை எவ்வாறு வேலை செய்கிறது? என்பதை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் தோனியுடன் இணைந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஒரு கேப்டனாக அவர் மிகச்சிறப்பான முடிவுகளை எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிலர் சிஎஸ்கே அணியில் விளையாடி உள்ளதால் அவர்களிடம் தோனி குறித்து கேட்டு அறிந்து உள்ளேன். மாபெரும் கேப்டனான அவருடைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கும்? அவருடைய நுட்பம் எவ்வாறு இருக்கும் என்பதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இப்போது தோனி அழைத்தால் கூட நான் அவரது தலைமையில் விளையாட தயாராக இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காகவும் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

Read Entire Article