
கராச்சி,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு வெற்றி மட்டுமே கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி, ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 43 வயதான அவர், பேட்டிங்கில் இறுதி கட்டத்தில் இறங்கி அணிக்கு தோல்வியை கொடுத்து வருவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
குறிப்பாக டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகளை எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைந்தார். எனவே அவர் ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனி 35 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஒரு விக்கெட் கீப்பராக அதிகபட்சம் விளையாட வேண்டிய வயது 35 தான். ஒரு அதற்கு நானே சரியான உதாரணம். அதன் பிறகு நாம் சிறப்பாக விளையாடவில்லை என்றால் இளம் தலைமுறை வீரர்களுடன் போட்டி போட முடியாது.
என்னை பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலேயே தோனியால் இந்திய அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே அவர் அப்போதே அதை புரிந்து கொண்டு ஓய்வை அறிவித்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு வீரருக்காக அணியை தேர்வுசெய்தால் அது விளையாட்டுக்கு நியாயமற்றது.
சென்னை அணி தோனியை மட்டும் கொண்டாடுகிறது. சிஎஸ்கே அணி கடைசியாக விளையாடிய சில ஆட்டங்களை நான் பார்த்தேன் அதில் தோனி வரும்போது சத்தம் அதிகளவு இருக்கிறது. ஆனால் தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் கடைசி நிலையில் இருக்கிறார்கள். நீங்கள் காலத்தின் தேவையை உணர வேண்டும்" என்று கூறினார்.