பாலக்காடு: காசர்கோடு மாவட்டத்தில், தோட்டத்து கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு பின்னர் புத்தூர் விலங்கியல் பூங்காவில் விடுவித்தனர். கேரளா மாநிலம், காசர்கோடு அருகே உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் இருந்து தோட்டத்திற்கு புகுந்து 6 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று, கம்பி வேலியில் சிக்கி கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது.
இதனை பார்த்த தோட்டத் தொழிலாளர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்டு திருச்சூர் மண்ணுத்தி கால்நடை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கால்நடை மருத்துவர்கள் அனூப், சுசீல் குமார், அருண் சத்தியன், சிரில் அலோஷியஸ் ஆகியோர் முன்னிலையில் சிறுத்தைக்கு கால்களில் ஆபரேஷன் செய்யப்பட்டு புத்தூர் விலங்கியல் பூங்காவில் விடுவித்தனர்.
இதையடுத்து சிறுத்தை தண்ணீர் மற்றும் உணவு வகைகள் உட்கொண்டு வருகிறது. காயம் குணமடைந்த நிலையில் சிறுத்தை நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் புதிய சிறுத்தையை பார்க்க ஏராளமான பொதுமக்கள் விலங்கியல் பூங்காவிற்கு திரண்டு வந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி நகராட்சி பஸ் நிலையம் அருகே கண்ணம்புழா அம்பலம் சாலையில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின்படி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை பிடிப்பதற்கு கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தையின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவானது.
இதனைத்தொடர்ந்து கண்ணம்புழா அருகே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். சாலக்குடி டி.எப்.ஓ. வெங்கடேஸ்வரன், பரியாரம் சரக அதிகாரி ஜோபிண் ஆகியோர் தலைமையில் கண்ணம்புழாவில் கூண்டு வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் வனத்துறை சார்பில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் மூலமாக சிறுத்தையை வனத்துறையினர் நோட்டமிட்டு வருகின்றனர். மேலும் வனத்துறை காவலர்கள் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post தோட்டத்து கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்டு சிகிச்சைக்கு பின் விலங்கியல் பூங்காவில் விடுவிப்பு appeared first on Dinakaran.