தொழில் மற்றும் வணிக உரிம கட்டணங்கள் குறைப்பு; தமிழ்நாடு அரசுக்கு விக்கிரமராஜா நன்றி

3 months ago 13

சென்னை: தொழில் மற்றும் வணிக உரிம கட்டணங்களை குறைத்த தமிழக அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு திடீரென தொழில், வணிக உரிம கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி வணிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது பெருமளவு அடித்தட்டு, சிறு, குறு வணிகர்களை மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதோடு, அரசின் மீது வணிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி, நகராட்சி துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அதற்கான விளக்கமும், விவரமும் அளித்து அடித்தட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திட குறைந்தபட்சம் 1000 சதுரஅடி பரப்பளவிற்கான உரிமக்கட்டணத்தை 500 சதுரஅடி பரப்பளவாக குறைத்து, பெட்டிக்கடை, டீக்கடை, சிறு, குறு, கடைகள், பாஸ்புட் உணவகங்கள் போன்ற 500 சதுரஅடிக்கு குறைவானவற்றிற்கு வணிக உரிமக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.1000-மாக அறிவித்திட வேண்டும் என கோரிக்கை வைத்தன.

அதை ஏற்று, தமிழக அரசு தற்போது 500 சதுரஅடி பரப்பளவுக்கு குறைவான தொழில், வணிக உரிமக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.1200 என குறைத்து அறிவித்திருக்கிறது. இதற்கு எங்களது பேரமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கின்றது. அதே சமயம் வணிக உரிமக்கட்டணத்தை செலுத்தி, உரிமம் புதுப்பித்துக்கொள்வதற்கு குறுகிய காலமே இருப்பதனால், 45 நாட்கள் கூடுதலாக அதாவது வருகின்ற மே 15 வரை வணிக உரிமங்கள் எந்தவித கூடுதல் கட்டணமும், அபராதமும் இன்றி செலுத்திட கால நீட்டிப்பு அளித்திட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

The post தொழில் மற்றும் வணிக உரிம கட்டணங்கள் குறைப்பு; தமிழ்நாடு அரசுக்கு விக்கிரமராஜா நன்றி appeared first on Dinakaran.

Read Entire Article