தொல்காப்பியர் பூங்கா சீரமைப்பு பணி விரைவில் முடியும்: மயிலாப்பூர் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

1 day ago 3

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு (திமுக) பேசுகையில், “மயிலாப்பூர் தொகுதியிலே கலைஞரால் உருவாக்கப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தொல்காப்பியப் பூங்கா பராமரிப்புப் பணிகள் எப்போது முடியும்” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், நமது அரசு தொல்காப்பியப் பூங்கா மறு மேம்பாட்டுப் பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைமூலம் மேற்கொள்ளப்பட்டு ரூ.42.45 கோடி வழங்கியுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின்மூலம் புதிய நுழைவுவாயில், கண்காணிப்புக் கோபுரம், பார்வையாளர்கள் மாடம், நடைபாதைகள், சிற்றுண்டியகம், புதிய கலப்புரை, திறந்தவெளி அரங்கம், இணைப்புப் பாலம், கண்காணிப்புப் கேமிரா பொருத்துதல், மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் சுற்றுச்சுவர் பழுதுபார்ப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வருகிற 30ம் தேதிக்குள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைபாதை, மேம்பாலம் மற்றும் சிறுபாலம் ஆகிய பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சியின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முழுமையாக அந்தப் பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. விரைவிலே முதல்வர் வந்து பார்வையிட இருக்கிறார். எனவே, உறுப்பினர் த.வேலுவின் பகுதியிலே இருக்கிற பூங்கா மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.

* ரியல் எஸ்டேட் அமைப்பவர்கள் கண்டிப்பாக பூங்காக்களை அமைத்து தர வேண்டும் என்ற உத்தரவை அரசு வழங்குமா? பேரவையில் துணைசபாநாயகர் பிச்சாண்டி கேள்வி
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், “என்னுடைய கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ரியஸ் எஸ்டேட்காரர்களால் பூங்காவிற்கு என்று இடம் விட்டிருக்கிறார்களே தவிர, அதில் பூங்காக்கள் அமைக்கப்படாமல் இருக்கின்றன. ஆகவே, அந்த ரியல் எஸ்டேட் போடுகிறவர்களே, அந்தப் பூங்காவை அமைப்பதற்கு அரசு உத்தரவு வழங்குமா? அதேபோல, இந்தப் பூங்காக்களுக்கு வெயில் காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் காய்ந்துவிடும் நிலை இருக்கிறது. ஆகவே, எல்லா வங்கிகளில் இருக்கிற சிஎஸ்ஆர் நிதி மூலம் டேங்குகளை அமைத்து, தண்ணீரை எல்லா பூங்காக்களுக்கும் கொடுத்தால்தான், பூங்காக்களைப் பராமரிக்க இயலும் என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “பொதுவாக, பிளாட் போடும்போது ஓஎஸ்ஆர் லேண்ட் கொடுக்கும் இடத்தில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளை பேரூராட்சி அல்லது நகராட்சிதான் செய்ய முடியும். அப்பணியையும் ரியல் எஸ்டேட்காரர்களிடமே கொடுக்கமுடியும் என்று சொன்னால், அவர்கள் அதையும் சேர்த்து எடுத்துக்கொண்டுவிட்டால், அது சரியாக இருக்காது. உறுப்பினரின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, பேரூராட்சி மூலமாக அதனைச் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

* அமைச்சர் சேகர்பாபு பேச்சுக்கு எதிர்ப்பு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு: பேரவையில் திடீர் சலசலப்பு
சட்டப்பேரவையில் நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து அதிமுக ஆட்சியில் கோயில்களில் நடந்த திருமணங்கள் குறித்து பேசினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமாரை பார்த்து ஒரு வார்த்தை தெரிவித்தார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் சேகர்பாபு பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி கோரினர். அதற்கு சபாநாயகர் அப்பாவு, ‘நான் அவை குறிப்பை பார்த்து நடவடிக்கை எடுக்கிறேன். இப்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமருங்கள்’ என்றார்.
அதனைத்தொடர்ந்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் சம்பவத்தால் அவையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

The post தொல்காப்பியர் பூங்கா சீரமைப்பு பணி விரைவில் முடியும்: மயிலாப்பூர் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article