தொலைபேசியில் 'முத்தலாக்' சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

11 hours ago 1

கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சலாவுதின் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அந்த இளம்பெண்ணை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தும், சித்ரவதை தொடர்ந்தது. அதனால் கடந்த 26-ந் தேதி, அந்த இளம்பெண் தனது தாயாரின் இல்லத்துக்கு வந்து விட்டார்.

இதனையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு இளம்பெண்ணும், அவருடைய தாயாரும் சென்றனர். கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர், புகாரை நிராகரித்து, வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டார்.

இதற்கிடையே, தாய் வீட்டில் இருந்த அந்த பெண்ணை மராட்டியத்தில் இருந்து கணவர் சலாவுதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, விவாகரத்து செய்வதற்காக அவர் தொலைபேசியிலேயே 'முத்தலாக்' கூறியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண், இரவில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தும், அதை சப்-இன்ஸ்பெக்டர் ஏற்காததால்தான், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டதாக இளம்பெண்ணின் தாயார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் நடந்த உள்மட்ட விசாரணையில், இளம்பெண் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் சிங்கை சஸ்பெண்ட் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும், துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார். இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் சலாவுதின் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Read Entire Article