தஞ்சாவூர், டிச. 2: தொடர் மழையால் சத்துக்களை இழந்துள்ள நெற்பயிர்களை மீட்டுக் கொண்டு வர சிங்சல்பேட், நெல் நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள், சூடோமோனாஸ் போன்ற அனைத்து இடுப்பொருட்களும் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் 50 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என வேளாண் அலுவலர் வித்யா தகவல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், நடப்பாண்டில் தற்போது வரை 2 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா, தாளடி நடவு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள இடங்களில் நெல் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடைமடை பாசன பகுதிகளிலும் ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தற்போது வரை 800 ஏக்கர் பரப்பளவில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அனைத்து வட்டாரங்களிலும் 2,500 ஏக்கர் பரப்பில் இளம் நடவு நெற்பயிர் மூழ்கியுள்ளதாக கள ஆய்வில் அறிக்கை பெறப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னர் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள பரப்பு ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். இந்நிலையில், தஞ்சை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் வித்யா நேற்று தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்தார்.
அங்குள்ள விவசாயிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டு சத்துக்களை இழந்துள்ள பயிர்க்களை மீட்டெடுக்க தேவையான உரங்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும். சிங்சல்பேட், நெல் நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள், சூடோமோனாஸ் போன்ற எதிர் உயிர் காரணிகள் ஆகிய அனைத்து இடுப்பொருட்களும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 50 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
The post தொடர்மழையால் சத்துக்களை இழந்துள்ள நெற்பயிர்களுக்கு தேவையான உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன appeared first on Dinakaran.