இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே 3ம் தேதி முதல் கடந்த 21 மாதங்களாக கலவரம் நடந்துவருகிறது. இந்த சூழலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் பிரேன்சிங் கடந்த 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதா அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதா என்பது குறித்த ஆலோசனையை பா.ஜ மேலிடம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மணிப்பூர் பா.ஜ மேலிட பொறுப்பாளர் சம்பித் பத்ரா கடந்த 2 நாட்களாக பா.ஜ எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி கூட இருந்த சட்டப்பேரவை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரேன்சிங்கிற்கு எதிராக பா.ஜ எம்எல்ஏக்கள் சுமார் 10 பேர் வாக்களிக்க இருந்ததாக தகவல் பரவியதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரும் சஸ்பெண்ட் செய்யப்ட்டது.
இதனால் பா.ஜ எம்எல்ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில் நேற்று 3ம்நாளாக பா.ஜ ஆலோசனை நீடித்தது. பாஜ எம்.எல்.ஏ.க்கள் சபம் கேபா மற்றும் கே. இபோம்சா ஆகியோர் நேற்று சம்பித் பத்ராவை சந்தித்தனர். அதன் பின்னர் அவர்கள் கூறுகையில்,’ கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் புதிய முதல்வர் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றனர். இதற்கிடையே வனத்துறை அமைச்சர் பிஷ்வாஜித்தும் நேற்று சம்பித் பத்ராவை தனியாக ஹோட்டலில் சந்தித்தார். அப்போது புதிய முதல்வர் குறித்து விவாதிக்கவில்லை என்றார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்தது சட்டவிரோதம்
மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா கூறுகையில்,’மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்து ஆளுநர் அஜய் குமார் பல்லா பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது. மணிப்பூர் சட்டப்பேரவையை சஸ்பெண்ட் செய்ய அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பிரதமர் மோடி விரும்புகிறார் என்று நம்புகிறேன். இந்த நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் நிற்போம்’ என்றார்.
கவர்னருடன் பா.ஜ குழு சந்திப்பு
மணிப்பூர் அரசியலில் பரபரப்பு எழுந்துள்ள சூழலில் மாநில பொறுப்பாளர் சம்பித் பத்ரா, மாநில தலைவர் ஷாரதா தேவி, கல்வி அமைச்சர் பசந்தகுமார் சிங், கூட்டணி கட்சியான என்பிஎப் தலைவர் நியூமாய், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ நாசிர் ஆகியோர் கவர்னர் அஜய்குமார் பல்லாவை நேற்று சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. புதிய முதல்வர் பதவி ஏற்பா அல்லது ஜனாதிபதி ஆட்சியா என்பது குறித்தும் விளக்கப்படவில்லை.
வதந்திகளை நம்ப வேண்டாம்
மணிப்பூர் தலைமைச் செயலாளர் பி.கே.சிங் ‘மணிப்பூர் மாநில மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கக் கூடாது. சில நேர்மையற்ற நபர்கள் பொய் கதைகளைப் பரப்பி பொதுமக்களிடையே அச்சத்தை பரப்பவும் முயற்சிப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தொடர்ந்து 3ம் நாளாக ஆலோசனை: மணிப்பூர் புதிய முதல்வர் தேர்வு எப்போது? appeared first on Dinakaran.