ராமநாதபுரம், ஜன.18: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி இரண்டு நாளில் ரூ.2 கோடிக்கு ஆடு மற்றும் நாட்டுக்கோழி விற்பனை நடந்துள்ளது. கமுதியில் செவ்வாய்கிழமையன்று, வாரச்சந்தை நடப்பது வழக்கம், அன்று பொங்கல் திருநாள் என்பதால் முன்கூட்டியே திங்கள் கிழமை வாரச்சந்தை நடந்தது.
இதேபோன்று ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் புதன் கிழமையிலும், பரமக்குடியில் வியாழக்கிழமையிலும், முதுகுளத்தூரிலும் நடந்த வாரச்சந்தையில் தனியாக ஆட்டுச்சந்தையும் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்தும், ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள் வெள்ளாடு, கிடாய் என எடைக்கேற்றவாறு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்றனர்.
ஆடு வியாபாரிகளிடம், பொதுமக்கள், கிராம பகுதி சிறு வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் ரூ.2 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்ததாக ஆடு வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவும், வாரச்சந்தை மற்றும் கோழிக்கடைகளில் பொதுமக்கள் நாட்டுக்கோழிகளை வாங்கியால் நாட்டுக்கோழி விற்பனையும் சூடுபிடித்தது.
மேலும் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர், வெளிமாவட்டங்களில் வேலை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்துள்ளனர். நாளை விடுமுறை முடிவடைய உள்ளநிலையில், மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழி விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post தொடர் விடுமுறையையொட்டி ரூ.2 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை appeared first on Dinakaran.