தொடர் விடுமுறையால் வாகன நெரிசலில் தத்தளிக்கும் ஊட்டி நகரம்: 2 கிமீ தூரத்தை கடக்க அரை மணி நேரமாகிறது

3 months ago 15

ஊட்டி: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டும், தொடர் விடுமுறையை கொண்டாடவும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி நகரத்தை முற்றுகையிட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இருப்பினும், அரசு விடுமுறை, பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது, கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டியை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஊட்டி நகரத்தில் முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆயுதபூஜை விடுமுறை மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் விடுமுறை கிடைத்த நிலையில், சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளன.

அதேபோல், நேற்று ஊட்டியில் உள்ள முக்கிய கடை வீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேரிங்கிராஸ் சாலை மற்றும் பூங்கா சாலைகளில் சுற்றுலா பயணிகள் வாகனத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஊட்டி – குன்னூர் சாலை மற்றும் பூங்கா செல்லும் சாலை உட்பட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. மேலும், போக்குவரத்தை சீரமைக்க அனைத்து சாலைகளிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இருப்பினும், அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்ததால், ஊட்டி நகரம் மட்டுமின்றி, அனைத்து சுற்றுலா தலங்கள் செல்லும் சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது.

ஊட்டியில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை நாட்களில் பொதுவாக ஊட்டியில் வாகன நெரிசல் காணப்படும். ஆனால், கடந்த 2 நாட்களாக வழக்கத்தை காட்டிலும் அதிக வாகனங்கள் வந்த நிலையில், ஊட்டி – குன்னூர் சாலையில், லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து ஊட்டி நகருக்குள் வர சுமார் அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை ஆனது. இது சுற்றுலா பயணிகளுக்கு பெரிதாக தெரியவில்லை. எனினும், அவசர தேவைகளுக்காக நகருக்குள் வந்த கிராமப்புற மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெரும்பாலான அரசு பஸ்கள் அனைத்தும் நேற்று கால தாமதமாகவே கிராமப்புறங்களுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் விடுமுறையால் வாகன நெரிசலில் தத்தளிக்கும் ஊட்டி நகரம்: 2 கிமீ தூரத்தை கடக்க அரை மணி நேரமாகிறது appeared first on Dinakaran.

Read Entire Article