கோவை : கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை, மேட்டுப்பாளையம், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய சிறுவாணி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சிறுவாணி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் நொய்யல் ஆற்றின் முதல் அணையான சித்திரைச்சாவடி அணைக்கு வினாடிக்கு 650 கனஅடி நீர்வரத்து இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் கால்வாய் வழியாக குளங்களுக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதனால், மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிருஷ்ணாம்பதி, செல்வசிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, சிங்காநல்லூர் ஆகிய 5 குளங்கள் உள்பட பெல்லாதி, இருகூர் குளங்கள் என மொத்தம் 7 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
மேலும், 348 ஏக்கர் பரப்பிலான உக்கடம் பெரியகுளம் 92 சதவீதம் நிரம்பி உள்ளது. நீலாம்பூர், சூலூர் பெரியகுளம் தலா 95 சதவீதமும், உக்குளம் மற்றும் வாலாங்குளம் 82 சதவீதமும், குறிச்சி குளம் 72 சதவீதமும், நரசாம்பதி மற்றும் பேரூர் பெரியகுளம் 62 சதவீதமும் நிரம்பி உள்ளது. தொடர்ந்து குளங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, ஆற்றில் குளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள் தடுப்பணைகளில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பிற துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 7.30 மணி முதல் நேற்று காலை 7.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 754.80 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: பீளமேடு 10.60, வேளாண் பல்கலை 7.70, பெரியநாயக்கன்பாளையம் 3, மேட்டுப்பாளையம் 8, பில்லூர் அணை 7, அன்னூர் 5.20, கோவை தெற்கு 19.70, சூலூர் 10, வாரப்பட்டி 23, தொண்டாமுத்தூர் 19.80, சிறுவாணி அடிவாரம் 86, மதுக்கரை 16, போத்தனூர் 12.40, பொள்ளாச்சி 28.40, மக்கினாம்பட்டி 44.60, கிணத்துக்கடவு 26, ஆனைமலை 39, ஆழியார் 28.40, சின்கோனா 70, சின்னகல்லார் 116, வால்பாறை 58, வால்பாறை தாலுகா 55, சோலையார் 61.
கட்டுப்பாட்டு அறைக்கு 22 புகார்கள் வந்தன
கோவை மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 2 நாளில் மின்சாரத் தடை தெடார்பாக 15 புகார், மரம் விழுந்தது குறித்த 5 புகார் மற்றும் கழிவுநீர், மழைநீர் தேங்குதல் தொடர்பாக 2 புகார்கள் என மொத்தம் 22 புகார்கள் வந்தன. இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு 7 குளங்கள் நிரம்பின appeared first on Dinakaran.