தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் ஒன்றிய அரசு எதையும் கண்டுகொள்ளாமலும், தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமலும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக்கொண்டு கோரிக்கையை நிராகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் நீட் தேர்விற்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த சமூகநீதி முறையால்தான் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவச் சேவையை இன்றைக்கு அரசு வழங்கி வருகின்றது. ஒன்றிய அரசு நீட் தேர்வினை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி மையங்களுக்கு செலவழிக்க வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது பொருளாதார ரீதியான முன்னேறிய மாணவர்களுக்கு சாதகமாகவும் வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது.
ஆனால் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாது மாணவர்களிடையே மன அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. சிலர் அதனை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்ட கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆட்சி அமைந்ததும் நீட் தேர்விற்கு மாற்றாக மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி சட்டப்பேரவையில் தமிழ்நாடு மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் 2021 என்ற சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2022ம் ஆண்டு மே 2ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த சட்டமுன்வரைவு மீண்டும் பேரவையில் அறிமுகப்படுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அச்சட்ட முன்வரைவு மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை, ஆயுஷ்துறை, உள்துறை, உயர் கல்வித்துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களை வழங்கியது. ஆனாலும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை சிறிதும் மதிக்காமல் எதேச்சதிகார போக்கினை ஒன்றிய அரசு தொடர்ந்து கடைபிடித்து வந்தாலும் நீட் தேர்வு ரத்தாகும் வரை தமிழ்நாடு அரசு தனது போராட்டத்தை கைவிடுவதில்லை என்ற உறுதியோடு செயல்பட்டு வருகிறது.
நீட் விலக்கு தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 9ம் தேதி அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தில் உறுதியோடு அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் தொடரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் மருத்துவர் கனவோடு கல்வி பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
The post தொடரும் போராட்டம் appeared first on Dinakaran.