தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

3 months ago 21

சென்னை: வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) 3வது வாரம் தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? மாணவர்கள் மழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகள், அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:
* பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுவது, குழிகளை நிரப்புவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
* பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். பலவீனமான, பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
* இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய கட்டிடங்கள் இடிக்கப்படவேண்டிய நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கலாம்.
* பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். ஏரி, ஆறு, குளங்களில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்கவும், காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என்பதையும் பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
* மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரைகூறவேண்டும். தொடர்மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திடவேண்டும்.
* மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா? மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா? என்பதை ஆய்வுசெய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை மூடியநிலையில் இருக்கிறதா என உறுதி செய்யவேண்டும்.
* பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் (டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட) இருந்து பாதுகத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகள் வழங்குவதுடன் நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும்.

The post தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article