* தொகுதி வரையறை எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற திட்டம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். ஒன்றிய அரசு 2026ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. அதன்படி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படவுள்ளதால் தற்போது தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கும் சூழல் என்பது தான் நிகழ்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது, நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்,
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் – தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம், தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக – பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது, இக்கோரிக்கைளையும், அவைசார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் – மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் – தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘‘கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்படுகிறது’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலம் உள்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தினை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து நேரில் சென்று முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் நாளை காலை 10 மணிக்கு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதல் கூட்டமானது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்துள்ளார்.
அவரை தமிழ்நாடு முதல்வரின் சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, இன்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆகியோர் சென்னை வந்தனர். சென்னை வந்த இவர்கள் அனைவரையும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர்கள், எம்பிக்கள் வரவேற்று, அவர்களை சென்னையின் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வர உள்ளதால் சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றிலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை ‘கூட்டு நடவடிக்கை குழு’ ஆலோசனை: பஞ்சாப், தெலங்கானா முதலமைச்சர்கள் வருகை appeared first on Dinakaran.