டெல்லி: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின் 1951, 1961 மற்றும் 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு முறையை 494, 522 இறுதியாக 543 என நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவிப்பதற்காக தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது நிறுத்தப்பட்டது.
அதிக மக்கள் தொகை உள்ள காரணத்தினால் மட்டுமே மாநிலங்களுக்கு அதிக மக்களவை உறுப்பினர்கள் கிடைப்பதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்பின் 2001ல் மறுவரையறைக்கு திட்டமிடப்பட்டாலும் சமசீரற்ற மக்கள் தொகையை சுட்டிக்காட்டி தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் தொகுதி சீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தற்போது தொகுதி மறுவரையறையை செயல்படுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டுகிறது. இத்திட்டத்தை இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றில் ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 மக்கள் தொகை அடிப்படையில் தற்போது உள்ள 543 தொகுதிகளில் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் மறுவரையறை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த முறையை பின்பற்றினால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 80லிருந்து 91ஆகவும், பீகாரில் 40லிருந்து 50ஆகவும், ராஜஸ்தானில் 25லிருந்து 31ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 29லிருந்து 33ஆகவும் உயரும். அதேவேளையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் 39லிருந்து 31ஆகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் 42லிருந்து 34ஆகவும், கேரளாவில் 20லிருந்து 13ஆகவும், கர்நாடகாவில் 28லிருந்து 26ஆகவும், பஞ்சாபில் 13லிருந்து 12ஆகவும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதன்மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையும்.
இரண்டாவது திட்டமாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக உயர்த்தி மறுவரையறை செய்ய பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிகிறது. அவ்வாறு செய்தால் அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் தொகுத்திகளின் எண்ணிக்கை 80லிருந்து 143ஆக அதிகரிக்கும், பீகாரில் 40லிருந்து 79ஆகவும், ராஜஸ்தானில் 25லிருந்து 50ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 29லிருந்து 52ஆகவும் உயரும். அதேவேளையில் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை 39லிருந்து 49ஆக மட்டுமே அதிகரிக்கும். கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. கர்நாடகாவில் 28லிருந்து 41ஆகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 42லிருந்து 54ஆக மட்டுமே தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், விகிதாசார அடிப்படையில் பார்த்தாலும் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால் அதுவும் அல்லாமல் வெறும் 10 தொகுதிகளை மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்படும் நிலை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கை மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கை என தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
The post தொகுதி மறுசீரமைப்பு: வட மாநிலங்களுக்கே சாதகம்!: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படுவது எப்படி? appeared first on Dinakaran.