சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டி: மாநில உரிமைகளுக்கான சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பது ஒரு மைல்கல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் உறுப்பினர்களையும் கொண்ட சட்டமன்றத்தின் தீர்மானம்தான் வலிமையானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்கக் கடமைப்பட்டவர் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்காமல் காலவரையின்றி ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போட்டு வைப்பதோ, தன்னுடைய அதிகார வரம்பை மீறி ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதோ சட்டவிரோதம் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய காலக்கெடு குறித்து உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது, நமது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றியிருக்கும் அம்சமாகும்.
தமிழ்நாடு அரசின் வழக்கில் கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஆளுநர், பிரதமர் என யாருடனும் எங்களுக்கு நேரடிப் பகையில்லை. அவரவர் பதவிக்குரிய மதிப்பை உரிய முறையில் அளித்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து பா.ஜ.க. ஆட்சி செய்யாத – ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுநர் மாளிகையும் பல்கலைக்கழகங்களும் ஜனநாயகம் வேட்டையாடப்படும் இடங்களாக மாறியிருக்கின்றன.
நீதிமன்றங்கள் வாயிலாக தீர்ப்பைப் பெற்று ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுகிறது. ஆனாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் அசைன்மென்ட்டை நிறைவேற்றும் சட்டவிரோதப் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டின் ஆர்.என்.ரவி அவர்கள் திருந்த மாட்டார் என்பதை ஒரு பொதுவிழாவிலேயே தெரிவித்திருக்கிறேன். டெல்லியில் இருப்பவர்கள் சுல்தான்களும் இல்லை; தமிழ்நாடு போன்ற மாநிலங்களை ஆள்பவர்கள் அடிமைகளும் இல்லை! இதைத்தான் தி.மு.க. தொடர்ந்து சொல்லி வருகிறது. மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். அதன் காரணமாக, மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான சில நடவடிக்கைகளும், அந்தந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களும் கடந்த காலங்களில் நிறைவேறியுள்ளன.
ஆனால், தற்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு தன்னை சுல்தானாக நினைத்துக்கொண்டு, மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்க நினைக்கிறது. கல்வி உரிமை, நிதி உரிமை, வரி உரிமை, அதிகார உரிமை எனப் பலவற்றையும் பறித்து வருகிறது. தமிழ்நாட்டையும் தென்னிந்தியாவையும் முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, ஆட்சி அமைக்கும் வகையில் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையைக் காரணம் காட்டி குறைக்கக்கூடிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்தியாவில், மாநிலங்களே இல்லாத நிலையையும், அப்படியே இருந்தாலும் அவை வெறும் முனிசிபல் கார்ப்பரேஷன் போன்ற சாதாரண அதிகாரங்கள் கொண்டவையாகத்தான் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடனும் பா.ஜ.க அரசு செயல்படுவதால், இந்த அச்சுறுத்தலையும் ஜனநாயக விரோதப் போக்கையும் எதிர்கொள்ளவே ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மூன்று பேரைக் கொண்ட ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழுவை அமைத்துள்ளோம்.
எங்கள் நோக்கம், மாநிலங்கள் அதிகார பலம் பெறும்போது ஒன்றிய அரசு வலிமையானதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதுதான். அது நிச்சயம் நிறைவேறும். ஏனெனில், பா.ஜ.க.வே நிரந்தரமாக இந்த நாட்டை ஆளப்போவதில்லை. சர்வாதிகாரப் போக்கை காலம் தூக்கி எறிந்த வரலாறு நிறைய உண்டு.வடமாநிலங்களில் தனக்குள்ள செல்வாக்கே போதும் என்ற நினைப்பில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பா.ஜ.க. தொடர்ந்து வஞ்சிக்கிறது.
The post தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.