தைத்திருநாளுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் காய்கறி, கரும்பு, மஞ்சள்குலை, வாழைத்தார் விற்பனை ஜோர்

3 hours ago 3

* ஒரு கட்டு கரும்பு ரூ.550, பனங்கிழங்கு ரூ.250.

* பொங்கல் படி கொடுப்பதற்காக ஆர்வத்துடன் வாங்கி சென்ற மக்கள்

தூத்துக்குடி : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரும்பு, வாழைத்தார், மஞ்சள்குலை, காய்கறிகளின் விற்பனை களை கட்டியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கனிகள், வாழைத்தார், கரும்பு, மஞ்சள்குலைகளின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, ஓட்டப்பிடாரம், குரும்பூர், நாசரேத், திருச்செந்தூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார்கள் லட்சக்கணக்கில் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது.

வாழைத்தார்களின் வரத்து அதிகமாக இருந்தபோதும் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக வாழைத்தார்கள் ஏலமிடப்பட்டு, இங்கிருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, உசிலம்பட்டி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தபோதும் விலை அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக தேங்காய்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் சிறியது ரூ.100 முதலும், பெரியது ரூ.120 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய தேங்காய் தனியாக ரூ.40 வரை விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலை இன்றும், நாளையும் மேலும் உயருமென கூறப்படுகிறது.

மதுரை, ஒட்டன்சத்திரம், தேனி, பெரியகுளம், மேலூர் பகுதிகளில் இருந்து லாரிகளில் கரும்பு கட்டுகள் வந்து விற்பனைக்காக குவிந்துள்ளன. நேற்று 15 கரும்புகளை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.550க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பொங்கல் படி கொடுப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

பொங்கல் வைப்பதற்கான மண் பானைகளும் நகரில் ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பானைகள் ரூ.200க்கும், அடுப்பு ரூ.200க்கும், கலர் அடுப்பு கட்டிகள் ரூ.200 முதல் ரூ.400 வரையும் விற்பனையாகி வருகிறது.மஞ்சள் குலைகள் கடந்த 2 நாட்களாக சாயர்புரம், திருமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்டு தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவை ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டன. 25 கிழங்குகள் அடங்கிய ஒரு கட்டு பனங்கிழங்கு (உடன்குடி) ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வருகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள பனங்கிழங்குகள் ஒரு கட்டு ரூ.150 முதல் 175 வரையில் விற்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழைத்தார்களை பொறுத்தவரையில் கதலி ரூ.500, கோழிக்கூடு ரூ.700, சக்கை ரூ.500, கற்பூரவள்ளி ரூ.750, செவ்வாழை ரூ.1000 முதல் ரூ.1200 வரையும், நாட்டு வாழை தார் ரூ.800க்கும், பச்சை வாழை ரூ.800க்கும் விற்பனையாகி வருகிறது.

விலை அதிகமாக இருந்த போதும் மக்கள் வாழைத்தார்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இது தவிர பொங்கல் பூ எனப்படும் கன்னுப்பிள்ளை பூ விற்பனையும் பரபரப்பாக நடந்து வருகிறது.

பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காய்கனி மார்க்கெட், பாளை ரோடு, தேவர்புரம் ரோடு, பாலவிநாயகர் கோயில் தெரு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பொருட்களை விற்பனை செய்யும் பிளாட்பார கடைகள், கரும்பு கடைகள் துவக்கப்பட்டு உள்ளன.

இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே இவ்வழியாக போக்குவரத்தை மாற்றி விட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பித்தளை, வெண்கல பானை விற்பனையும் சூடுபிடித்தது

கோவில்பட்டி: கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு கிராமங்களில் மண்பானைகளில் பொங்கலிடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் கால சுழற்சியால் இன்றைக்கு கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் மண் பானைகளில் பொங்கலிடுவது முற்றிலும் மாறி வெண்கலம், பித்தளை பானைகளில் பொங்கலிட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி நகரில் கிருஷ்ணன் கோயில் தெரு, மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, தெற்குபஜார், மாதாங்கோயில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பாத்திரக் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெண்கலம் மற்றும் பித்தளை பானைகள், குத்துவிளக்குகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி வியாபாரி முத்துமணி கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கும்பகோணம், மதுரை போன்ற பகுதியில் தயாரிக்கப்படும் வெண்கலம், பித்தளை பானைகளை கொள்முதல் செய்து விற்கிறோம். வெண்கல பானை கிலோவிற்கு ₹900க்கும், பித்தளை பானை கிலோவிற்கு ரூ.950க்கும் விற்கப்படுகிறது.

பித்தளை குத்துவிளக்குகள் விற்பனையும் நன்றாக உள்ளது. ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து செப்பு பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன, என்றார். இதேபோல் மண்பானை விற்பனையும் களைகட்டியுள்ளது.கோவில்பட்டி கடலைக்கார தெருவில் உள்ள கடைகளில் பொங்கல் பானை, அடுப்பு, பொங்கல் கட்டி, வர்ணம் பூசிய பானை ஆகியவற்றின் விற்பனையும் நடந்து வருகிறது.

பொங்கல் பானை ரூ.150 முதல் 180 வரையும், அடுப்பு ரூ.140 முதல் 160 வரையும், பொங்கல் கட்டி ரூ.60க்கும், வர்ணம் பூசிய பானை ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மண் பானைகள் மற்றும் அடுப்புகள் மானாமதுரை, நெல்லை, பாளை உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

பனை ஓலை விலை ரூ.15

உடன்குடி: பொங்கல் வைப்பதற்கு பயன்படுத்தும் அடுப்புகளை பற்ற வைக்க பனை ஓலைகளைத்தான் பயன்படுத்துவர். உடன்குடி பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகள், தெருக்கள் உள்ளிட்டவற்றில் பனை ஓலைகளை குவியல், குவியலாக குவித்து விற்பனை நடந்து வருகிறது. மேலும் இருசக்கர வாகனத்திலும் தெரு, தெருவாக கொண்டு சென்று விற்று வருகின்றனர். ஒரு பனை ஓலை ரூ.15க்கும், 4 பனை ஓலை ₹50க்கும் விற்கப்படுகிறது.

The post தைத்திருநாளுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் காய்கறி, கரும்பு, மஞ்சள்குலை, வாழைத்தார் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Read Entire Article