*குடிமகன்கள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவீரஅள்ளி கிராமத்தில் அஞ்சலகம், நூலகம், அங்கன்வாடி மைய வளாகத்தை, மது அருந்தும் கூடமாக குடிமகன்கள் மாற்றியுள்ளனர்.
இதனை தடுக்க இந்த வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி ஊராட்சியில் உள்ள தேவீரஅள்ளி கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, பள்ளி செயல்பட்டு வந்த அந்த பழைய கட்டிடத்தில், தற்போது அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
அதன் அருகில் ஊர்ப்புற நூலகமும், ஊராட்சிக்கு உட்பட்ட பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. அந்த குடோனில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஊரில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பழைய கட்டிடத்தில் அஞ்சலகம், நூலகம் மற்றும் அங்கன்வாடி மையம் அனைத்தும் அருகருகில் உள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மது குடித்து விட்டு இந்த வளாகத்தில் மதுபாட்டில்களை உடைத்து வீசி செல்வதாலும், அந்த பகுதியில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு செல்வதாலும் காலையில் வருபவர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. அஞ்சலகம், நூலகம், அங்கன்வாடி மையம் என அனைத்திலும் பெண்களே பணிபுரிந்து வருகின்றனர்.
குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி கட்டிடத்தின் அருகிலேயே இயற்கை உபாதைகளை கழித்து விட்டு செல்வதால், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த கட்டிடங்களை உள்ளடக்கிய பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே போல, இரவு நேரத்தில கண்காணிப்பு பணியை மேற்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து தேவீரஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் சிங்காரம் ஆகியோர் கூறுகையில், ‘தேவீரஅள்ளி கிராமத்தில் ஏராளமான படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளனர்.
இவர்கள் இங்குள்ள நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அருகருகே அஞ்சலகம், நூலகம், அங்கன்வாடி மையம் உள்ளது. ஆனால், இரவு நேரங்களில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு, பாட்டில்களை உடைத்து வீசி விட்டு சென்று விடுகின்றனர்.
அத்துடன் இயற்கை உபாதைகளையும் கழித்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் செல்லவே அருவறுப்பாக உள்ளது. எனவே, அஞ்சலகம், நூலகம், அங்கன்வாடி மையம் ஆகியவை இணைந்த பகுதிக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும், இந்த பகுதியில் மது குடித்து விட்டு பாட்டில்களை போட்டு செல்பவர்களை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
The post தேவீரஅள்ளி கிராமத்தில் மது அருந்தும் கூடமாக மாறிய நூலகம், அங்கன்வாடி வளாகம் appeared first on Dinakaran.