தேவியர் தரிசனம்

4 weeks ago 8

திருச்செந்தூருக்குத் தெற்கே 14 கி.மீ தொலைவில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் அறம்வளர்த்த நாயகியை தரிசிக்கலாம். ஆலயத்தில் அன்னைக்குப் படைக்கப்பட்டு அளிக்கப்படும் மாம்பழ பிரசாதம் மழலை வரம் அருள்கிறது.

*திருநெல்வேலி காந்திமதி அன்னை தினமும் உச்சிக்காலத்தில் நெல்லையப்பருக்கும் பரிவார தேவதைகளுக்கும் தீவட்டி பரிவாரங்கள் மற்றும் அர்ச்சகருடன் சென்று நைவேத்தியம் செய்த பின்னே தன் பூஜையையும் நைவேத்யத்தையும் ஏற்றருள்கிறாள்.

*சக்தி பீடங்களில் விமலை பீடமாய் திகழ்கிறது நெல்லை, அம்பா சமுத்திரம், பாபநாசம் உலகம்மை சந்நதி. நமசிவாயர் எனும் கவியின் வயிற்று வலி தீர்த்தருளி அவரை ஆட்கொண்ட தேவி இவள்.

*குற்றாலத்தில் யோகபீடம் எனும் பெயரில் பராசக்தி மேரு வடிவில் திருவருள் புரிகிறாள். பௌர்ணமி தினங்களிலும், நவராத்தியின் போதும் இந்த பராசக்தி பீடம் விசேஷமாக வழிபடப்படுகிறது.

*விருதுநகர், தென்காசி பாதையில் உள்ள சங்கரன்கோவிலில் கோமதியம்மன் தனிப்பெருங்கருணையோடு அருள்கிறாள். இத்தேவியின் சந்நதி முன் வேலப்ப தேசிக மூர்த்திகள் எனும் அடியார் பிரதிஷ்டை செய்த சக்கரத்தின் அருகே ஆடாத பேயும் ஆடுகிறது. தீராத நோயும் தீர்கிறது.

*64 திருவிளையாடல்களைப் புரிந்த மதுரை சோமசுந்தரக் கடவுளின் பட்டத்து ராணியான மீனாட்சி தேவியை தொடர்ந்து மூன்று நாட்கள் திருப்பள்ளியெழுச்சியின் போதும் இரவு பள்ளியறை பூஜையின் போதும் வணங்கினால் நம் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன.

*ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளின் குலதெய்வமாக விளங்குபவள் ராமேசுவரம் பர்வதவர்த்தனி அம்பிகை. அழகு தமிழில், மலைவளர் காதலி, இத்தேவியின் திருவடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தங்க ஸ்ரீஸ்ரீசக்ரம் சக்தி வாய்ந்தது.

*மயிலாடுதுறை திருமணஞ்சேரியில் அருளும் அருள்வள்ளல்நாதரும் யாழினுமென்மொழியாளும் தம்மை தரிசிப்பவர்களுக்கு மணப்பேற்றைத் தருகின்றனர். இத்தலத்தில் திருமணமானவர்களின் மண வாழ்க்கை ஒரு போதும் முறிவதில்லை என்பது நிச்சயமான உண்மையாகும்.

*திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, ஆதி சங்கரரால் அணிவிக்கப்பட்ட ஸ்ரீஸ்ரீசக்ரம், சிவசக்ரம் எனும் இரண்டு தாடங்கங்களை அணிந்து தன் மேலிரு கரங்களில் மகாலட்சுமியைப் போன்றே தாமரை மலர்களை ஏந்தி அருள் பாலிக்கிறாள்.

*கும்பகோணம் கும்பேசுவரர் ஆலயத்தில் கொலுவிருக்கும் மந்திரபீடேஸ்வரி மங்களநாயகி, பக்தர்களின் பல்வேறு நோய்களைப் போக்குவதால் ‘பலநோயறுக்கும்பரை’ என்ற பெயரும் இத்தேவிக்கு உண்டு.

*திருவாரூர் தியாகராஜர் ஆலய இரண்டாம் பிராகாரத்தில் தன் ஒரு கையில் நீலோத்பல மலரை ஏந்தி மறு கரத்து சுண்டுவிரலால். தோழியின் தோள் அமர்ந்திருக்கும் முருகனின் சுண்டு விரலைப் பிடித்திருக்கும் எழிலுருவில் நீலோத்பலாம்பாளை தரிசிக்கலாம்.

*திருவையாற்றில் அப்பருக்கு திருக்கயிலையைக் காட்டியருளிய ஐயாறப்பனையும், தர்மஸம்வர்த்தனியையும் தரிசிக்கலாம். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் உடல்நலிவுற்ற சமயத்தில் இத்தேவி அவருக்கு கஷாயம் வைத்துக் கொடுத்துக் காத்தது வரலாறு.

*திருக்கடவூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய தேவி, அபிராமி! தை அமாவாசை அன்று அபிராமி பட்டர் உற்சவம் இங்கு நடக்கும். அப்போது அபிராமி அந்தாதி சம்பவம் நடத்திக் காட்டப்படும்.

*பார்வதி மயிலுருக்கொண்டு ஈசனை பூஜித்த தலங்களுள் ஒன்று மயிலாடுதுறை. இங்கு தேவிக்கு அபயாம்பிகை என்று பெயர். இத்தல ஜுரதேவருக்கு நூறுகுடம் தண்ணீரால் அபிஷேகம் செய்தால் கடுமையான ஜுரமும் நீங்கிவிடுகிறது.

*சென்னை, திருவொற்றியூர். வடிவுடையம்மன் பக்தர்களைக் கண்ணை இமை போல் காத்தருள்பவள். வெள்ளிக்கிழமைகளில் இத்தேவியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த அம்மனையும், கொடியிடை (மேலூர்), திருவுடை (திருமுல்லைவாயில்) மூன்று தேவியரையும் பௌர்ணமி தினத்தில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

*ஆந்திரமாநிலம், ஸ்ரீஸ்ரீசைலத்தில் பிரமராம்பிகை அருட்கோலம் கொண்டுள்ளாள். பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை மட்டும் வழிபட்டதால் தேவி அவரை தண்டித்து மீண்டும் ஆட்கொண்ட தலம். இன்றும் தேவியின் சந்நதியின் பின்புறம் காதை கொடுத்துக் கேட்டால் வண்டின் ரீங்கார ஒலியைக் கேட்கலாம்.

*சிருங்கேரியில் சரஸ்வதி தேவி சாரதாம்பாளாகத் திகழ்கிறாள். ஆதி சங்கரருடன் வாதத்தில் தோற்ற மண்டலமிச்ரரின் மனைவி சரசவாணியே இங்கு சாரதா தேவியாக அருள்கிறார். ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களுள் போக பீடமாக திகழும் சிருங்கேரியில் சாரதா தேவி சகல கலைகளையும் அருள்பவளாகத் தண்ணருள் பாலிக்கிறாள்.

*காசியில் விசாலாட்சி, அன்னபூரணி என இரு அம்சங்களாக தேவி அருள்கிறாள். இருவர் முன்பும் தனித்தனியே ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விஜயதசமியன்று தங்க விசாலாட்சியையும், தீபாவளியின் போது தங்க அன்னபூரணியையும் தரிசிக்கலாம்.

*குளித்தலையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருஈங்கோய்மலையில் லலிதா தேவியை தரிசிக்கலாம். இத்தலம் சாயாபீடம் எனப் போற்றப்படுகிறது. பெண் யோகினிகள் பூஜைகள், யாகங்கள் செய்யும் தலமிது.

*காஞ்சிபுரம் காமாட்சி தேவி அருளும் பீடம், ஒட்டியாண பீடம் எனப்படுகிறது. இத்தேவியின் திருவுருமுன் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வசின்யாதி வாக்தேவதைகளுக்கே அனைத்து அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன. இவர்களே திருமயஞ்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய தேவியர் ஆவர்.

The post தேவியர் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article