தேவஸ்தான அறங்காவலர்கள் அனுமதியுடன்தான் நெய் கொள்முதல்; திருப்பதி லட்டில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

3 months ago 26

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தாடேப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நெய் கொள்முதல் செய்யப்படுவது பல ஆண்டுகளாக இருந்து வரும் நடவடிக்கை. 6 மாதங்களுக்கு ஒரு முறை நெய் கொள்முதல் செய்யப்படும். அதன் தரம், சுவை தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. வழக்கமாக திருப்பதி தேவஸ்தானம் டெண்டருக்கு பிறகு வரக்கூடிய நெய் 3 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு பிறகு மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வகத்தில் தரம் பரிசோதிக்கப்படும்.

ஆனால் முதல்முறையாக சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெய் குஜராத்தில் உள்ள என்டிடிபி தேசிய பால்வளம் மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சரியாக தீவனம் சாப்பிடாத மாட்டின் பாலில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது பருத்தி விதைகள் போன்றவற்றை தீவனமாக சாப்பிட்ட மாட்டின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்யாக இருந்தாலும் இதுபோன்று வரலாம் என கூறி விலங்குகள் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்திருக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதனை அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சந்திரபாபுநாயுடு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த நெய்யில் லட்டு தயார் செய்யப்பட்டு பக்தர்கள் சாப்பிட்டார்கள் எனவும் கூறியுள்ளார். அவர் சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஒன்றிய அமைச்சர்கள், அண்டை மாநில முதல்வர்கள் பரிந்துரையின்பேரில் அந்தந்த மாநிலத்தில் உள்ள ஆன்மீக பக்தி சிந்தனை கொண்டவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அந்த குழுவினர் டெண்டர் வழங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை விவாதம் செய்து இறுதி செய்து யார் குறைந்த விலைக்கு தர முன் வருகிறார்களோ அவர்களிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. வெங்கடேஸ்வரசுவாமிக்கும், லட்டு பிரசாதத்திற்கும் சந்திரபாபு செய்த களங்கத்திற்கு பாவ விமோசனமாக மாநிலம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை மேற்கொள்ள நான் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசிக்க செல்வதாகவும் கூறினேன். அதனை திசைத்திருப்பும் விதமாக நான் சுவாமி மீது நம்பிக்கை இருப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். நான் திருப்பதிக்கு செல்வதை தடுக்க பல மாவட்டங்களில் இருந்தும் பாஜவினர் திருப்பதிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கும் போலீசார் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தடைவிதிக்கின்றனர்.

இந்து மதம் என்றாலே மனித நேயம்தான். பாஜவினர் இந்துக்களின் பிரதிநிதிகள் என கூறும் நிலையில் அவர்கள் கூட்டணியில் உள்ள சந்திரபாபுநாயுடு, ஏழுமலையானுக்கும் லட்டு பிரசாதத்திற்கும் களங்கம் ஏற்படுத்தக்கூடிய நிலையில் ஏன் அவர்கள் கண்டிக்கவில்லை. என்னை கோயிலுக்கு அனுமதிக்கிறார்களோ இல்லையோ.. சந்திரபாபு நாயுடு செய்த களங்கத்திற்கு அந்த சுவாமியின் சாபத்திற்கு ஆளாகாமல் மாநிலம் காப்பாற்ற வேண்டும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கோயில்களில் வேண்டி பூஜை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துள்ளது. நேற்று 64,158 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 24,938 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.31 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 12 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

அரசியல் ஆதாயம் அடைவதா? பிரகாஷ்ராஜ் கேள்வி;
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு தெரிவித்த கருத்து உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நாள்தோறும் ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சர்ச்சையில் ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் கூறிய கருத்தை வைத்து 2 நாட்களாக தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று மேலும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘நமக்கு என்ன வேண்டும்? மக்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் அடைவதா அல்லது மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் மென்மையாக பிரச்னையை தீர்ப்பதா? நிர்வாக ரீதியாக தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் வேண்டுமா? பொறுப்பில் இருக்கும் பவன்கல்யாண், லட்டு சர்ச்சையில் தனது கருத்துகளால் மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டி வருகிறார். இதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற விரும்புகிறீர்களா அல்லது முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகிறீர்களா என்று பிரகாஷ்ராஜ், துணை முதல்வர் பவன்கல்யாணுக்கு கேள்வி விடுத்துள்ளார்.

The post தேவஸ்தான அறங்காவலர்கள் அனுமதியுடன்தான் நெய் கொள்முதல்; திருப்பதி லட்டில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article