தேர்வு பயத்தினால் மாணவன் தற்கொலை முயற்சி

1 week ago 4

புதுச்சேரி, பிப். 14: தேர்வு பயத்தினால் மாணவன் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் வருகிற 15ம் தேதி முதல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளியில் நேற்று முன்தினம் காலை மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கி வந்தனர். அப்போது ரெட்டியார்பாளையம் பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு மாணவன் ஹால் டிக்கெட் வாங்க பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது கையை கிழித்துக்கொண்டு முதல் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அறிந்த கல்வி அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், எம்எல்ஏக்கள் நேரு, வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் மாணவனிடம் நலம் விசாரித்தனர். தேர்வு பயம் காரணமாக மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் கூறினர். ஆனால் மாணவனின் தாயார் இல்லை, பள்ளியில் ஏதோ நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.இந்நிலையில் உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, வருகிற பொதுத்தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவேன் என்ற பயத்தில் மாணவன் இருந்ததாகவும், இதுகுறித்து சக மாணவர்களிடம் கடந்த சில நாட்களாக கூறியும் வந்துள்ளார். மேலும் ஹால் டிக்கெட் வாங்க மாணவன் கிளம்பியபோது, வீட்டிலிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து வந்து கையை அறுத்து கொண்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

The post தேர்வு பயத்தினால் மாணவன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article