தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, அந்தமான் உள்ளிட்ட நாடுகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக விவசாயிகளை நேரடியாக வியாபாரிகள் சந்தித்து, தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஓசூர், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மலர் சாகுபடிக்கு அடுத்தபடியாக தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், கேரட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக காய்கறி, தக்காளி விலை உயராமல் நிலையாக உள்ளது. தக்காளி 20 கிலோ கொண்ட கூடை ₹200 முதல் ₹400 வரை விலை போகிறது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் இருதுக்கோட்டை, கோபசந்திரம், பேளாளம், தோட்டிகுப்பம், சந்தனப்பள்ளி, கூச்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில், வியாபாரிகள் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளனர். விவசாயிகளிடம் தக்காளியை செடிகளில் இருந்து காயாக பறித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். அவர்கள் உள்ளூர் மார்க்கெட்டில் ₹200க்கு விற்பனையாகும் 20 கிலோ தக்காளி கூடையை, ₹400 வரை விலை நிர்ணயம் செய்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தக்காளிக்கு கடந்த 6 மாதங்களாகவே நிலையான விலை கிடைக்காமல் உள்ளது. தற்போது அந்தமான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, சில மொத்த வியாபாரிகள் தோட்டங்களுக்கே நேரில் வந்து காய்களை பறிக்க வைத்து வாங்கி செல்கின்றனர். முதல்தர தக்காளி கூடை ஒன்று ₹400க்கு வாங்கி செல்கின்றனர். ஏற்றுமதிக்கு வியாபாரிகள் தக்காளியை வாங்குவதால் சற்று ஆறுதலாக உள்ளது,’ என்றனர்.
The post தேன்கனிக்கோட்டையில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு ஏற்றுமதியாகும் தக்காளி: வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் appeared first on Dinakaran.