தேன் பிசினஸிலும் லாபம் பார்க்கலாம்!

1 week ago 4

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாதையை ஏற்படுத்தி தருகிறது. சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். ஒரு சிலருக்கு அலுவலக வேலைதான் சவுகரியமாக இருக்கும். அலுவலக வேலையில் ஈடுபட்டு வந்த கோவையை சேர்ந்த ராஜேஷ் இப்போது முழுக்க முழுக்க விவசாயியாக மாறிவிட்டார். இவர் நிலத்தை உழுது எல்லாம் விவசாயம் செய்வதில்லை. மாறாக தேன்களை சேகரித்து ‘டிவைன் ஹார்வெஸ்ட்’ என்ற பெயரில் தன் மனைவியுடன் இணைந்து தேன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘நான் ஆரம்பத்தில் பி.பி.ஓ ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். வாழ்க்கை ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஏதாவது சொந்தமா சிறிய அளவில் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் என்ன தொழில் செய்வதுன்னு தெரியல. அதே சமயம் குடும்பச்சூழல் காரணமாகவும் என்னால் வேலையை விட்டுவிட்டு தொழிலில் ஈடுபட முடியவில்லை. அந்த சமயத்தில்தான் ஆர்கானிக் உணவுகளை மக்கள் விரும்ப ஆரம்பித்தார்கள். அதில் கவனம் செலுத்தவும் முன் வந்தார்கள். நானும் அந்த உணவின் மகத்துவம் புரிந்து கொண்டதால், தற்போது நிலவும் உணவு முறைகள் சரியில்லை என்று சொன்னேன். அப்போது என் மனைவி ‘நீங்களும் மற்றவர்கள் போல்தான் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால் அதற்கான செயலில் ஈடுபட முன்வரவில்லை’ என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை என் மனதில் ஆணிவேர் போல் பதிந்தது. ஏற்கனவே தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது. வெற்றியோ தோல்வியோ பார்த்துக் கொள்ளலாம்னு முடிவு செய்தேன். தொழில் செய்யவும், அது நிலைத்து வரும் வரையில் என் குடும்பத்தின் செலவுக்காகவும், ஒரு குறிப்பிட்ட தொகையினை இருப்பில் வைத்தேன்.

அதன் பிறகு வேலையை தைரியமாக ராஜினாமா செய்தேன். தொழில் செய்வது என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் அந்தத் தொழில் குறித்து முறையாக தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் மாடு மற்றும் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி எடுத்தேன். மாடு வளர்ப்பு பொறுத்தவரை தோட்டம், தனி வீடு என கொஞ்சம் வசதி இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று தோன்றியது. அதனால் தேனீ வளர்ப்பு பயிற்சியினை இங்குள்ள வேளாண் கல்லூரியில் பயின்றேன். பயிற்சி காலம் முடியும் போது அவர்கள் சாம்பிளாக தேன் கொடுத்தார்கள். அந்த தேன் மிகவும் சுத்தமாக இருந்தது. எனக்கு பொதுவாகவே உணவுகள் தரமாக இருக்க வேண்டும்.

இந்த தேன் சாப்பிட்ட போது அவ்வளவு தரமாகவும் சுத்தமாகவும் இருந்தது. மார்க்கெட்டில் விற்கப்படும் தேனுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன். அப்போது முடிவு செய்தேன், தேன் விற்பனை செய்யலாம் என்று. எனக்கு தெரிந்தவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அவரிடம் பேசி அவரின் தோட்டத்தில் தேனீ பெட்டிகளை வைத்தேன். இரண்டு மாதங்கள் வளர்த்தேன். ஆரம்பக் கட்டத்தில் தேனீக்கள் பறந்துவிட்டன. இது எல்லோருக்கும் பொதுவாக நடப்பதுதான். இதற்கு பின் இதே முறையை பின்பற்றினால்
மீண்டும் தேனீக்கள் பறந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன்’’ என்றவர் அதற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.

‘‘தேன் பெட்டிகளை வைத்தும் அதில் தேனீக்கள் தங்கவே இல்லை. மறுபடியும் அதை எவ்வாறு செய்வதுன்னு யோசனையில் இருந்த போது, ஒருவர் என்னிடம் ‘மலைத்தேன் 10 கிலோ வேண்டும். அதனை சப்ளை தருபவர்கள் தெரியுமா’ன்னு கேட்டார். உடனே நான் அவரிடம் ‘முயற்சி செய்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ஊட்டிக்கு சென்றேன். அங்கு அலைந்து திரிந்து, தரமான மலைத்தேன் கிடைக்கும் இடத்தை கண்டுபிடித்தேன். அங்கு ஐம்பது கிலோ தேன் வாங்கி வந்தேன்.

ஏற்கனவே கேட்டவருக்கு பத்து கிலோ கொடுத்துவிட்டு மற்றதை விற்பனை செய்தேன். நாம் தேனீக்களை வளர்த்து அதில் இருந்து தேனை எடுத்து கொடுப்பதற்கு பதில் மலை ஜாதியினரிடம் இருந்து வாங்கிக் கொடுத்தால், நமக்கும் லாபம் கிடைக்கும் அதே சமயம் அவர்களுக்கும் ஒரு வருமானம் ஏற்படுத்தி தர முடியும்னு முடிவு செய்தேன். அதன் பிறகு மலைத்தேன், கொம்புத்தேன் உள்ள இடங்களை தேடிப் பிடித்தேன்.

அவர்கள் தேன் சேகரிப்பதை என்னுடைய யுடியூப் சேனலில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து பலர் ஆர்டர் கொடுக்க முன்வந்தார்கள். ஐந்து கிலோவில் ஆரம்பித்து தற்போது 150 கிலோ வரை விற்பனை செய்து வருகிறேன்’’ என்றவர் ஊட்டி, கொடைக்கானல் மட்டுமில்லாமல் பந்திப்பூர் போன்ற காட்டுப் பகுதியில் உள்ள பழங்குடியினர் மூலமாக அரசின் அனுமதியோடு அதனை பெற்று வருகிறார். அவர் சேகரிக்கும் தேன் குறித்து விவரித்தார்.

‘‘கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பாளைப்பூ தேன் கிடைக்கும். பாளைப்பூ வருஷத்துக்கு ஒருமுறை மே, ஜூன் மாதங்களில் பூக்கும். அதன் பிறகு அடுத்த இரண்டு மாதங்களில் அதில் இருந்து தேன் எடுக்கலாம். இந்த தேன் ஆரஞ்சு நிறத்தில் நல்ல வாசனையுடன் மற்றும் சுவையுடன் இருக்கும். இதே போல் முருங்கை மற்றும் நாவல் பூக்களில் உள்ள தேன்களையும் விற்பனை செய்கிறோம். தேன் தவிர நாட்டு மாட்டு நெய்யும் விற்பனை செய்யும் எண்ணம் உள்ளது.

தேனை இந்தியா முழுக்க அனுப்பி வைக்கிறோம். சென்னையில் அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதால், அங்கு தனிப்பட்ட கடை ஒன்றை அமைக்கும் எண்ணம் உள்ளது.
நான் மலைத்தேன் மற்றும் கொம்புத் தேன் இரண்டும் விற்பனை செய்கிறேன். மலைத் தேனீயின் கொடுக்கு பெரிதாக இருக்கும். மலை சார்ந்த பகுதியில் உயரமான இடத்தில்தான் இந்த தேனீக்கள் கூடு கட்டும். சில நேரங்களில் அடுக்குமாடியினை மலை என்று நினைத்து கட்டிவிடுகிறது. இந்த தேனீ கடித்தால் கொஞ்சம் ஆபத்தானது. மலைவாசிகள் புகை போட்டுதான் தேன் எடுப்பார்கள்.

கொம்புத் தேனீ சிறிய வகையானது. கடித்தால் வலி இருக்குமே தவிர ஆபத்து இல்லை. இவை மரத்தின் கொம்புகளில் கூடு கட்டும். இந்த தேனை ஒரு வயது வரை பேசாமல் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால், நன்றாக பேச ஆரம்பித்து விடுவதாக எங்களிடம் வாங்கி சென்றவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு தேன் கொடுத்து வந்தால், அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, இருமல் பாதிப்பு இருக்காது. பெரியவர்களும் நோய் எதிர்ப்பு சக்திக்காக இந்த தேனை எடுத்துக் கொள்ளலாம்.

மற்றொரு வகை அடுக்குத் தேனீ. இதன் கூடு அடுக்கு அடுக்காக இருக்கும். இந்த தேனீயைதான் பெட்டிகளில் வைத்து வளர்ப்பார்கள். இவை மரப் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். தேனினை எடுத்த பிறகு அதனை லேப் டெஸ்ட் செய்த பிறகு தான் விற்பனை செய்கிறோம். அதில் NMR ஆய்வு செய்தால், உலகளவில் இந்த தேன்களை சந்தைப்படுத்த உதவும். தற்போது இயற்கை உணவு வகைகளையும் அறிமுகம் செய்துள்ளதால் அவற்றின் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார் ராஜேஷ்.

தொகுப்பு: சித்ரா சுரேஷ்

படங்கள்:கார்த்தீஸ்வரன்

 

The post தேன் பிசினஸிலும் லாபம் பார்க்கலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article