தேனுக்கு மருத்துவக் குணங்கள் அதிகம் என்பதால் சந்தையில் அதன் தேவையும் அதிகமாகி இருக்கிறது. இருந்தபோதிலும் தேனீ வளர்ப்பு என்று வந்துவிட்டால் தேனீக்கள் கொட்டுமே என்று பலர் அதை ஒரு தொழிலாக தேர்ந்தெடுக்க முன்வருவதில்லை. சவால்கள் நிறைந்த இந்தத் தொழிலில் இறங்கி குறுகிய காலத்தில் அதிரடியான லாபம் பார்த்து வருகிறார் திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சந்தன சரஸ்வதி. பல வகையான தேனைச் சேகரித்து அசத்தலாக சந்தைப்படுத்தி வரும் சந்தன சரஸ்வதியைச் சந்தித்தோம். “ எனது கணவர் மணிமந்தரம் ரயில்வே போலீசாக வேலை பார்க்கிறார். நான் பிளஸ்-2 வரை படித்திருக்கிறேன். இந்த தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டது எதேச்சையாக நடந்ததுதான். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2021 காலக்கட்டத்தில் சுத்தமான தேன் வாங்குவதற்காக பல இடங்களில் தேடி அலைந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அப்போது வீட்டிலேயே தேன் பெட்டி வாங்கி வைத்துக்கொண்டு நமது தேவைக்கு தேன் சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன். அதற்காக கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி வகுப்புக்குச் சென்றேன். அங்கு தேனீக்களைக் கையாள்வது எப்படி? அதன் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து தெரிந்துகொண்டேன்.
இதைத் தொடர்ந்து எங்கள் சொந்தப் பயன்பாட்டுக்காக 4 தேன் பெட்டிகளை வாங்கிவைத்து வீட்டில் வளர்த்தேன். அப்போது ஒரு தேன் பெட்டியின் விலை ரூ.2,300. எனது தேவைக்குப் போக எங்களது பகுதியில் உள்ளவர்களுக்கும் தேன் விற்பனை செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு 6 மாத காலம் இப்படியே சென்றது. நான் அந்தக் காலகட்டத்தில் தேனீக்களைப் பற்றி கற்றது அதிகம். தேனீக்கள் கொட்டிவிடும் என்ற அச்சத்தில் இருப்பர்களுக்கு மத்தியில் நான் தேனீக்களை லாவகமாகக் கையாண்டு வந்தேன். மேலும் சுத்தமான தேன் என்னிடம் கிடைக்கும் என்ற தகவல் எங்கள் பகுதி முழுவதும் பரவியது. பலர் வீடு தேடி வந்து தேனை வாங்கிச் செல்லத் தொடங்கினர்.அதனால் தேன் பெட்டிகளை அதிகப்படுத்தி, தேனீ வளர்ப்பில் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினேன். 2021ல் ரூ.3 லட்சம் முதலீட்டில் 350 பெட்டிகளை வாங்கினேன். விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் தோட்டங்களில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை நிறுவினேன். அந்த ஆண்டில் மட்டும் 1.5 டன் தேன் சேகரித்தேன்.
ஆனால் அதை விற்பனை செய்யவும், சந்தைப்படுத்தவும் அப்போது பல்வேறு சிரமங்களைச் சந்தித்தேன். ஆனால் தேன் கெட்டுப்போகும் தன்மை உடையது அல்ல என்பதால் சேகரித்து வைத்தேன். சந்தைப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்தபோதுதான் சென்னையில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சுற்றுச்சூழலுக்கு தீமை விளைவிக்காத பொருட்களை விற்பனை செய்யும் வகையில் ஒரு அரங்கு அமைக்க அனுமதி கிடைத்தது. அங்கு வந்த யூ டிபர்களிடம் நான் விற்பனைக்கு வைத்திருந்த தேனின் உண்மைத்தன்மையை சோதனை செய்து விளக்கினேன். அந்த வீடியோ வைரலானது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களிடம் சென்றடைந்தது. அதன்மூலம் தேன் விற்பனை அதிகரித்தது. ஒருமுறை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் வாங்குகிறார்கள். அவர்கள் அவர்களின் நண்பர்கள், உறவினர்களிடம் கூறுவதன் மூலம் தேன் விற்பனை சிறப்பாக இருக்கிறது. முருங்கை மரங்கள் நிறைந்த தோட்டத்தில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை நிறுவி முருங்கைத் தேன் விற்பனை செய்தேன். இந்தத் தேன் வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த தேனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல் நாவல் மர தேன் விற்பனை செய்தேன். மலைத்தேன், கொம்புத்தேன் ஆகியவற்றின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. கொம்புத்தேன் என்பது மரக்களைகளில் சிறிய அளவில் இருக்கும். மலைத்தேன் என்பது, மலை மற்றும் உயரமான இடங்களில் 6 அடி நீளத்தில் இருக்கும். இந்த வகை தேனீக்கள் விரட்டிச் சென்று கொட்டும் தன்மை கொண்டவை. இதனால் இந்த வகை தேனை சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து மலைத்தேனை விற்பனை செய்து வருகிறேன்.
முன்னீர்பள்ளம், மாறாந்தை, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் விவசாய நிலத்தில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்திருக்கிறேன். வாரத்திற்கு ஒருமுறை அதற்குப் பராமரிப்பு தேவை. நானும் எனது கணவரும் பராமரிப்பு வேலைகளை செய்து வருகிறோம். அவர் ரயில்வே போலீஸ் வேலைக்குச் சென்றுவிட்டு தேனீ வளர்ப்பில் ஈடுபடுவார். தேனை பேக்கிங் செய்வதற்கு ஒரு பெண் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார். ஒரு கிலோ தேன் ரூ.700 என விற்பனை செய்துவருகிறேன். தேனீ வளர்ப்புத் தொழிலில் அனைத்து செலவும் போக 35 சதவீதம் லாபம் கிடைக்கும்.தேனீ வளர்ப்பில் ஈடுபட்ட முதல் ஆண்டில் மட்டும் 1.5 டன் தேன் விற்பனையானது. சுமார் ரூ.3.5 லட்சம் ஆண்டு வருமானம் கிடைத்தது. தினசரி 8 கிலோ முதல் 10 கிலோ வரை விற்பனையாகிறது. சராசரியாக மாதந்தோறும் அனைத்து செலவுகளும் போக ரூ.75 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.’’ என உற்சாகம் பொங்க பேசினார்.
தொடர்புக்கு:
சந்தனசரஸ்வதி: 94877 06061.
The post தேனீ வளர்ப்பில் தித்திக்கும் லாபம் appeared first on Dinakaran.