தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 months ago 20

‘‘களவாடிய பைக்குகள் எல்லாம் பழைய இரும்புக்கடைக்கு போய் அக்குவேற அணிவேற ஆகிறதுதான் இப்ப பிசினசாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வாணி பாடிய பகுதியில பழைய இரும்பு பொருட்கள் வாங்குற கடை இருக்குதாம்.. இங்க வாங்குற பொருட்களை எல்லாம் மொத்தமாக லாரியில இரும்பு தயாரிக்குற தொழிற்சாலைக்கே ஏற்றுமதி செய்றாங்களாம்.. இதுல ஒரு சில பழைய இரும்பு கடைகள்ல களவாடிய பைக், மொபட்டுகளை வாங்கிக்குறாங்களாம்.. வாங்குன வாகனங்களை தனித்தனியாக பிரிச்சு அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி விற்பனை செய்றாங்களாம்..

களவாடிகளுக்கு போதைக்கு மட்டும் பணம் கொடுத்தா போதுமாம், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு சில இரும்புக்கடைக்காரங்க, சட்டவிரோத செயல்கள்ல ஈடுபடுறாங்களாம்.. காக்கிகள் நிலையத்துல புகார் கொடுத்தும் பைக்குகள் கிடைக்காம போறதுக்கு காரணம், களவாடிய பைக்குகள் இரும்புக் கடைகளுக்கு போறதால தானாம்.. இந்த இரும்புக்கடை பிசுனஸ் எல்லாம் அந்த லிமிட்ல இருக்குற காக்கிகளுக்கு தெரியுமாம்.. ப விட்டமின் பாயுறதால, வெளிய தெரியாம பாத்துக்குறாங்களாம்.. சமீபத்துல ஒரு வியாபாரியோட பழைய மொபட்ட களவாடிட்டாங்களாம்..

அதை இரும்புகடையில விற்பனை செஞ்சிருக்காங்க.. அந்த மொபட்டை இன்னொருத்தரு விலைகொடுத்து வாங்க, திரும்பவும் ஓனர் கண்லயே அந்த மொபட் மாட்டிக்கிச்சாம்.. அப்புறம் காக்கிகள் விசாரணை நடத்தியிருக்காங்க, ஆனாலும் இரும்பு கடைக்கு ஆதரவாக பேசி விஷயத்தை முடிச்சுட்டாங்களாம்.. இதுல கொடுமை என்னன்னா, மொபட்டை பறிகொடுத்தவர்கிட்டயும் காக்கிகள் 3கே வாங்கிட்டாங்களாம்.. இதனால மாவட்ட உயர்காக்கிகள், வாணி பாடி மட்டுமில்லாம, மாவட்டம் முழுவதுமாகவே பழைய இரும்பு கடைகள்லயும் வீடியோ எடுத்து சோதனை செய்யணும்னு குரல் ஒலிக்கும் சத்தம் கேட்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொண்டை வறண்டு போற அளவுக்கு பேசுவதை ரசிக்கும் இலைக்கட்சி தலைவரால் தனது மகன் பர்த்டே பார்ட்டியை கொண்டாட முடியாம அப்சென்ட் ஆயிட்டாராமே மாங்கனி பேச்சாளர்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரின் பிரசார பீரங்கியாக மாங்கனி நகரை சேர்ந்த ஒருவர் இருக்காரு.. மலராத கட்சியில் இருந்து வெளியே வந்து மம்மியை சந்தித்து இலைக்கட்சில சேர்ந்தாரு.. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக இருந்த அவருக்கு கட்சியில எந்த பதவியும் கிடைக்கல.. மிகுந்த சோகத்துடன் இருந்த நேரத்தில், இலைக்கட்சி ரெண்டாக உடைந்ததாம்..

நல்ல மீனை பிடிக்க வாடி நிக்குமாம் கொக்கு என்பதை போல, அதிரடியாக மீனை பிடிச்சிட்டாராம்.. விவாதங்களில் இலைக்கட்சி தலைவரை யார் பேசினாலும், அதற்கு பதில் கொடுப்பதே இந்த மாங்கனி பேச்சாளர்தானாம்.. உச்சபச்ச சொற்களை கூட பயன்படுத்துவாராம்.. எல்லாம் எதற்காக என்றால் ஏதாவது ஒரு பதவி கிடைக்காதா, அப்படியே கட்சியில உயர்ந்த இடத்திற்கு போயிடமாட்டோமா என்பதுதானாம்.. இதற்காக அவரது தொண்டை வறண்டுபோகும் வரையில் கத்துவாராம்.. இதையெல்லாம் இலைக்கட்சி தலைவர் வீட்டிலிருந்தவாறே பார்த்து ரசிப்பாராம்.. நமக்காக இப்படியெல்லாம் கூவுறானே…

இதற்கு என்ன கைமாறு செய்யப்போறோம்னு நினைப்பாராம்.. என்றாலும் கட்சியில் அவருக்கென ஒரு பதவிகூட இதுவரை வழங்கலையாம்.. இந்நிலையில் அந்த பேச்சாளர் தனது ஒரே மகனின் பர்த்டேவை கொண்டாட முடிவு செஞ்சி, இலைக்கட்சி தலைவரை போய் அழைச்சிருக்காரு.. இவ்வாறு தனது வீட்டிற்கு வந்தால் தனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்குமேன்னு நினைத்தாராம்.. ஆனால் இலைகட்சி தலைவரோ முடியாதுன்னு ஒரே வார்த்தையில் சொல்லி மறுத்துட்டாராம்.. இதனால மனசொடிஞ்சிபோன பேச்சாளர் ரொம்பவே அப்செட் ஆகிட்டாராம்..

மகனை வாழ்த்த இலைக்கட்சி தலைவர் வீட்டுக்கு வருகிறார்னு கூறி ஐநூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாராம்.. இலைக்கட்சி தலைவரின் நிராகரிப்பால், பர்த்டே நிகழ்ச்சியை ரத்து செஞ்சதோட மட்டுமல்லாமல், அழைத்தவர்களிடம் வெளியூருக்கு போறேன்னு சொல்லி சமாளிச்சிருக்காரு… இலைகட்சி தலைவரை நம்பி அவரோடு யார் நெருங்கியிருக்கிறார்களோ அவர்களுக்கு அல்வாதான் கொடுப்பாருன்னு இலைக்கட்சி தொண்டர்கள் சொல்றாங்க..

என்றாலும் அந்த பேச்சாளர் யார் எதை சொன்னாலும் இலைக்கட்சி தலைவரின் புகழை உலகெங்கும் பரப்புவதே தன் தலையாய பணின்னு சோகத்துக்கிடையேயும் சொல்லிக்கிட்டிருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நெற்களஞ்சியத்தை விட்டு வெளியேறாத வைத்தியானவர் பற்றி திரைமறைவில் விசாரிக்கும் சேலத்துக்காரர் அணியினர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியான நெற்களஞ்சிய மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் வைத்தியானவர் அவ்வப்போது தலைநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி ‘விசிட்’ அடித்து வருகிறார்.

இதனால் நீண்ட நாட்கள் சொந்த மாவட்டமான நெற்களஞ்சியத்தில் வைத்தியானவர் தங்குவது கிடையாதாம்… ஆனால் தற்போது சொந்த மாவட்டத்திலே தங்கியுள்ளாராம்.. தலைநகருக்கும் அவர் செல்வது இல்லையாம்.. சொந்த மாவட்டத்திலே வைத்தியானவர் நீண்ட நாட்கள் தங்கியிருப்பது சேலத்துக்காரர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாம்…

முக்கியமாக, வைத்தியானவர் நீண்ட நாட்கள் ஏன் தங்கியிருக்கிறார் என அவர்களால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதற்கான காரணத்தை சேலத்துக்காரர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் திரைமறைவில் விசாரிக்க தொடங்கியுள்ளனராம்.. இதில் வேறு ஏதாவது திட்டத்தை அவர் வைத்துள்ளாரா என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்களாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article