தேனிக்காரர் அணியில் இருந்து மாஜி மந்திரியை நிரந்தரமாக பிரிக்க திட்டம் போடும் சேலம் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 months ago 10

‘‘ரெய்டுக்கு பிறகு வைத்தியானவர், தேனிக்காரர் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என சேலம்காரர் டீம் கண்காணிக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் வைத்தியானவர் தேனிக்காரர் அணியில் இருந்து வருகிறார். சமீபத்தில், வைத்தியானவரின் வீட்டில் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுக்கு பிறகு வைத்தியானவர், தேனிக்காரர் ஆகியோர் நட்பில் எதுவும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க சேலத்துக்காரர் உத்தரவிட்டுள்ளாராம்..

இதற்காக, நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தனி டீம் செயல்பட்டு வருகிறதாம்.. வைத்தியானவர் யார், யாரை சந்திக்கிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அந்த டீம் கண்காணித்து சேலத்துக்காரருக்கு அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறதாம்.. முக்கியமாக, தேனிக்காரர்- வைத்தியானவரின் உறவில் முன்பை விட, தற்போது நெருடல் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிச்சிட்டு வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதால் கரைந்து வரும் கட்சியில் ‘மாஜியை’ நம்பியுள்ள தொண்டர்கள் ஈக்கள் போல சுற்றி சுற்றி வர்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி போட்டியிடும் கோயம்பேடு கட்சி இருக்கும் இடம்தெரியாமல் கரைந்து கொண்டே வருகிறதாம்.. கட்சியை தூக்கி நிறுத்த வந்த லேடி மீதும் சொல்லும்படியான நம்பிக்கையில்லாததால் மாவட்டங்களில் மாஜி பிரதிநிதிகள், மூத்த பிரபலங்கள் என்னசெய்வதென்று திக்குமுக்காடி வருகிறார்களாம்..

வரவுள்ள எலக்‌ஷன் வரை பார்ப்போம். நல்ல கூட்டணி அமைகிறதான்னு ‘வெயிட்’ பண்ணிட்டிருக்காங்களாம்.. இதனிடையே புரம் பெயர் கொண்ட மாவட்டத்தில் மாஜி எம்எல்ஏவான அந்த கோடீஸ்வர கடவுளின் பெயரை கொண்டவரை நம்பிதான் தொண்டர்கள், நிர்வாகிகள் முழுக்க காத்திருக்கிறார்களாம்.. எப்படியாவது இத்தேர்தலில் ஆட்சியமைக்கும் கட்சியோடு கைகோர்த்து ெசல்வாக்கை தக்கவைத்துக் கொள்வார் என்ற நம்பிக் ‘கையில்’ சிலர் அவரை சுற்றிசுற்றி ஈக்கள்போல் வருகிறார்களாம்..

கட்சி தலைமையைவிட மாஜியை நம்பிதான் இந்த மாவட்டத்தில் ஒரு கூட்டமே பரிதாபமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி முட்டல் மோதலில் சிட்டிங் எம்எல்ஏவின் ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் சிலர் மாஜி அமைச்சர் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுறாங்களாமே..’’ என்றார் பீடடர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் இலைக்கட்சிக்குள் முட்டல், மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய மாவட்ட செயலாளருக்கு எதிராக மாஜி அமைச்சர் தரப்பு எதிர் வேலைகளை தொடங்கியுள்ளதாம்..

மாஜியானவர் அமைச்சராக இருந்தபோதே, அவருக்கு சீட் தராமல் தலைமை கழற்றி விட்டது. தற்போதைய எம்எல்ஏதான் மாவட்ட செயலாளராக இருந்தபோது வாய்ப்பு கிடைத்து போட்டியிட்டார். அவர் எம்எல்ஏ ஆனதால் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும்னு மாஜி அமைச்சர் தரப்பு மீசையை முறுக்கி வந்தது. கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு கட்டத்தில் கோஷ்டிமோதல் முற்றிய நிலையில் தற்போதைய மாவட்ட செயலாளர் தரப்பு, மாஜி அமைச்சரின் படம் மற்றும் பெயர்களை புறக்கணிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வதால் கோஷ்டிபூசல் முற்றுகிறதாம்..

எம்பி தேர்தலில் போட்டியிட மாஜி அமைச்சரின் மகன் விருப்பம் தெரிவித்தும், நேர்காணலுக்கு கூட அழைப்பு இல்லையாம்.. மாவட்ட செயலாளர் கொடுத்த லிஸ்டில் இருந்தவர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடந்ததாம்.. வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியை மறுபடியும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மாஜி தரப்பு மிகுந்த கவனமுடன் காய் நகர்த்தி வருகிறதாம்.. மகனுக்கு வாய்ப்பு… இல்லாவிட்டால், தனக்கு வாய்ப்பு என்ற இரண்டில் ஒன்றை எப்படியும் அடைந்து விட வேண்டுமென்ற நோக்கத்தில் மாஜி அமைச்சர் தரப்பு களத்தில் முட்டிமோதி வருகிறதாம்..

சிட்டிங் எம்எல்ஏவின் ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் சிலர் மாஜி அமைச்சர் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.. இதுதான் இலைக்கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாய் கடிக்கு ஊசி போட போகும் இடத்திலேயே நாய்கள் கடிப்பதுதான் தொல்லையிலும் தொல்லைன்னு பொதுமக்கள் புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில், நாய்கள் தொல்லை அதிகமாக இருக்காம்..

சமீபத்தில் சிறுமி ஒருவர், நாய் கடிபட்டு மீண்டு வந்து மாவட்ட உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் பரபரப்பாக பேசப்பட்டது. சிறுமியை கடிச்ச அந்த நாயை அதற்கு பிறகு தான் பிடிச்சி இருக்காங்க.. நாய்களை பிடிச்சு கருத்தடை செய்யுங்க என்று ஏற்கனவே மாவட்ட உயர் அதிகாரி உத்தரவு போட்டு இருக்காராம்.. நிலைமை இப்படி இருக்க, அந்த மாவட்ட தலைநகர் ஊரில் இருந்து அருகில் உள்ள கடலோர கிராமத்தை உள்ளடக்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில தங்கி பணி செய்யும் செவிலியர் ஒருவர், பிராணிகள் மீது அதிக பற்று உள்ளவராக இருக்காராம்..

சுகாதார நிலைய வளாகத்தில் இவரு தங்க அரசே வீடு கொடுத்திருக்கு.. அரசு கட்டிடத்தில் பிராணிகள் வளர்க்க கூடாது என்ற விதிமுறை மீறி இவரு 2 நாய்களை வளர்த்து வருகிறாராம்.. இந்த செவிலியரு பணிக்கு வரும் போது, கூடவே நாய்களும் வந்து விடுகிறது. சமீபத்தில் அங்கிருந்த மற்றொரு செவிலியர், ஊழியரு என 2 பேரை நாய் கடிச்சு ஊசி போட்டு இருக்காங்க..

இந்த நாய்களால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரவே மக்கள் அச்சப்படுறாங்களாம்.. எனவே அரசு கட்டிடத்தில் தங்கி இருந்து பணி செய்யும் இந்த செவிலியரின், சொந்த வீட்டுக்கு பிராணிகளை மாற்ற நடவடிக்கை எடுங்க என்று சுகாதார உயர் அதிகாரிக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பி வைச்சு இருக்காங்க.. நாய் கடிக்கு ஊசி போட வரும் இடத்திலேயே நாய்கள் தொல்லையா என்றும் பொதுமக்கள் புலம்புகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தேனிக்காரர் அணியில் இருந்து மாஜி மந்திரியை நிரந்தரமாக பிரிக்க திட்டம் போடும் சேலம் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article